ஒலிம்பிக்: ஏமாற்றமளித்த பி.வி. சிந்து, இந்தியாவிற்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம் 

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா 3வது பதக்கத்தை வென்றுள்ளது. ஆடவருக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் (air rifle) போட்டியில் 3வது பொஷிசன் பிரிவில் இந்தியாவின் ஸ்வப்னில் குசலே வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

நேற்று(01.08) நடைபெற்ற இந்த போட்டியில் தங்கப்பதக்கத்தை சீனாவின் ஒய்.கே. லூவும், வெள்ளிப் பதக்கத்தை உக்ரைன் வீரர் குலீஷ் கைப்பற்றினர். 

இந்தப் பதக்கம் உள்ளடங்கலாக இதுவரையில் 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ள இந்தியா பதக்கப் பட்டியலில் 41வது இடத்தில் உள்ளது. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மனு பாகர் வெண்கலப் பதக்கத்தையும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர்கள் பிரிவில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர். 

இந்தியாவின் நம்பிக்கையாக இருந்த பி.வி.சிந்து மகளிர் பூப்பந்தாட்ட ஒற்றையர் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவிடம் தோல்வியடைந்து பதக்கங்களின்றி ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறியுள்ளார்.  

நேற்று(01.08) நடைபெற்ற இந்த போட்டியில் சீன வீராங்கனை 19-21, 14-21 என செட்களை கைப்பற்றி பி.வி.சிந்துவுக்கு அதிர்ச்சியளித்தார். ஒலிம்பிக்கில் இரண்டு முறை பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்து கடந்த 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனாவின் ஹா பிங் ஜியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். 

இம் முறையும் பி.வி.சிந்து பதக்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் வெளியேறியுள்ளமை இந்திய இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கடந்த 26ம் திகதி பிரான்ஸ், பாரிஸில் ஆரம்பமாகி தற்பொழுது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்தும் முதலிடத்திலுள்ளது. சீனா 11 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 23 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது. 

பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் 9 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்காவும், மூன்றாம் இடத்தில் 8 தங்கம், 11 வெள்ளி, 8 வெண்கலப் பதக்கங்களுடன் போட்டிகளை நடாத்தும் பிரான்சும் உள்ளது. 

இதேவேளை, ஆசிய சாதனை படைத்த இலங்கையின் தருஷி கருணரத்ன பங்கேற்கும் மகளிருக்கான 800m ஓட்டப் போட்டியின் முதலாவது சுற்று இன்று(02.08) இலங்கை நேரப்படி இரவு 11.50 மணியளவில் நடைபெறவுள்ளது. 

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டிகளில் பங்கேற்றிருந்த கைல் அபேசிங்க ஆடவருக்கான 100 மீற்றர் பிரீஸ்டைல்(Freestyle) பிரிவின் ஆரம்பகட்ட போட்டியில்(Heat 4) இறுதி இடத்தை பெற்று வெளியேறியதுடன், கங்கா செனவிரத்ன மகளிருக்கான 100 மீற்றர் பேக் ஸ்ட்ரோக்(Backstroke) பிரிவின் முதல் சுற்று போட்டியொன்றில் முதலிடத்தை பெற்ற போதும், போட்டியை நிறைவு செய்வதற்கு அதிக நேரம் எடுத்தக்கொண்டதால் அடுத்த சுற்றுக்கு தகுதிப் பெறும் வாய்ப்பை இழந்தார். இலங்கையின் இளம் பூப்பந்தாட்ட வீரர் வீரேன் நெட்டசிங்க பங்கேற்ற முதல் சுற்றுப் போட்டிகளில் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து வெளியேறினார்.

இலங்கை வீரர்களான அருண தர்ஷன பங்கேற்றும் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியும், தில்ஹானி லேகம்கே பங்கேற்கும் மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளன. 

ஒலிம்பிக்: ஏமாற்றமளித்த பி.வி. சிந்து, இந்தியாவிற்கு மற்றுமொரு வெண்கலப் பதக்கம் 
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version