ஜனாதிபதி – அங்கஜன் இடையே சந்திப்பு 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்குமிடையே விசேட சந்திப்பு இன்று(02.08) இடம்பெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், யாழ் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாகவும் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பல கோரிக்கைகளை அங்கஜன் இராநாதன் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தார்.

நிகழ்வில் உரையாற்றிய அங்கஜன் இராமநாதன்,

“எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு மாகாணம் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை மையப்படுத்திய முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உள்ளடக்கும் போது எமது மக்கள் அவருக்கான ஆதரவை வழங்குவார்கள்.

அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, முன்னாள் போராளிகளுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள், வடக்கின் துரித பொருளாதார மேம்பாடு, காணி விடுவிப்பு, மீள்குடியேற்றம், அத்தியாவசிய தேவைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் எங்கள் மக்களின் நீண்ட கால கனவுகளாக உள்ளன.

அவற்றை நிறைவேற்றவல்ல தலைமைத்துவத்தையே எங்கள் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்த தலைவர் என்ற மதிப்பை மக்கள் உங்களிடத்தில் கொண்டுள்ளார்கள். ஆகவே எங்கள் மக்கள் தொடர்பிலும் சிந்திக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்” என்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கைகள் பின்வருமாறு, 

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற பெருமை மிக்க மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

வடமாகாணத்தின் குறிப்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தின் அபிலாஷைகளையும் தேவைகளையும் கருத்தில் கொண்டு அவற்றை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி, மிகுந்த நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் உங்களிடம் இந்த மகஜரை கையளிக்கின்றேன்.

கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த எங்கள் பிராந்தியம், எங்களின் நீண்ட கால சவால்களை எதிர்கொள்ளவும். நமது மகத்தான ஆற்றல்களை வெளிப்படுத்தவும் உங்கள் ஆதரவையும் தொலை நோக்கு சிந்தனையுள்ள தலைமைத்துவைத்தை எதிர்பார்க்கிறது. யாழ்ப்பாணத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது வாக்காளர்கள் மற்றும் பரந்துபட்ட மாகாண சமூகத்தின் சார்பாக இந்த வேண்டுகோள்களை முன்வைப்பதில் பெருமையடைகிறேன்.

அரசியல் திரவுக்கான நீண்டகாலத்தேடல்.

நாட்டில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் அந்நியப்படுதல் மற்றும் ஓரங்கட்டப்படுதல் ஆகிய அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அரசியல் நிர்வை முன்னெடுப்பது நிலையான சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் இன்றியமையாததாகும். ஒரு விரிவான அரசியல் தீர்வு மட்டுமே புலம்பெயர் தமிழ் மக்கவிடமிருந்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்தும் நாட்டுக்கு முதலீடுகளை கொண்டு வரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

வட பிராந்தியத்தின் விரைவான வளர்ச்சிக்கு சிறப்பு கவனம்.

வடக்கு மாகாணம், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்துக்கும் ஏனைய பிராந்தியங்களுக்குமிடையில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக இடைவெளிகளை குறைக்க ஒரு மூலோபாய செயல் திட்டமொன்று தேவைப்படுகிறது. கல்வி, விவசாயம். நீர்ப்பாசனம், மீன்பிடி கால்நடை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா போன்ற முக்கிய துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த சிறப்பு வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகள், நன்கொடையாளர் நிதிகள் மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) ஒருங்கிணைக்கும் வகையில் வடக்கு மாகாணத்துக்கான செயலணியை (NTF) உங்கள் தலைமையில் அமைக்க நாங்கள் முன்மொழிகிறோம்.

அதிகாரப் பகிர்வு மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துதல்

வடக்கு மாகாணமானது அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுக்காக நீண்ட காலமாக குரல்கொடுக்கிறது. இதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது. அதன் மேம்பாடுகளை (13+) உள்ளடக்குவது ஆகியவை இந்த இலக்கை அடைவதற்கு முக்கியமானதாகும். இது உள்ளுார் நிர்வாகத்தை மேம்படுத்துவதோடு, நமது மாகாணத்தின் தனிப்பட்ட தேவைகள் மற்றும் சவால்களை நிறம்பட எதிர்கொள்ளப்படுவதை உறுதி செய்யும். எங்கள் பிராந்தியத்தில் சமமான நிர்வாகம், பிராந்திய சுயாட்சி, அமைதி. ஸ்திரத்தன்மை மற்றும் மேம்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இந்த அரசியலமைப்பு ஆணைக்கு உங்கள் அர்ப்பணிப்பை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

மனிதாபிமான பிரச்சினைகள் மற்றும் சமூக முன்னேற்றம்

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் (IDPs) முழுமையானதும் வலுவானதுமான மீள்குடியேற்றம், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குதல், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் போரால் அங்கவீனமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் கௌரவம் மற்றும் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் உளவியல் சமூக மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதுடன் திறன் மேம்பாடு மற்றும் நிதியுதவி வழங்குதல் போன்ற மனிதாபிமான பிரச்சினைகனைத் தீர்ப்பதில் உங்கள் ஆதரவைக் கோருகிறோம். புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற முயற்சிகளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஆயுதப் படைகள் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு வசதி செய்தல் மற்றும் அரச திணைக்களங்களில் காணி விவகாரங்களைத் தீர்ப்பது போன்ற காணி விவகாரங்களைக் கையாள்வதில் உங்கள் தலைமைத்துவம் கவனம் செலுத்த வலியுறுத்துகிறோம்.

கல்விக்கான பிராந்தியமாகவும் மையமாகவும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்தல்

ஒரு வெற்றிகரமான அறிவு மையமாக நிகழ்வதற்கும், சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்கும். யாழ்ப்பாணத்தின் கல்வி முறை வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அதிக தொழில்நுட்ப வல்லுநர்களை நாம் உருவாக்க வேண்டியுள்ளது. இப்பகுதியில் O/L மற்றும் A/L பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களை தேசிய அளவில் ஒப்பிடுகையில், தேசிய அளவீடுகளை விட குறைந்த பல்கலைக்கழக அனுமதி விகிதத்தைக் கொண்டுள்ளது. இந்த திறமை பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்கலைக்கழக நுழைவு விகிதங்களை அதிகரிப்பது அவசியம். போருக்குப் பிந்தைய யாழ்ப்பாணம், கல்வி வளர்ச்சிக்கான அபரிமிதமான ஆற்றலையும் தேவையான உட்கட்டமைப்புகளையும் ஏற்கனவே கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தை ஒரு கல்வி மையமாக புந்துயிர் பெறச் செய்வதால், வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ள சமூகத்திற்கு ஆதரவாக செயற்பட ஆர்வம் கொண்டுள்ள மனித வளத்தை நாட்டுக்கு மீள கொண்டுவருவதோடு, முதலீடுகளையும் ஈர்க்க முடியும்.

பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் இளைஞர் வலுவூட்டல்

நிதி உதவித்திட்டங்கள், வர்த்தக கண்காட்சிகள் மற்றும் நிறனாளர்களை உள்ளீர்க்கும் மையங்கள் ஊடாக இளைஞர் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதோடு, வரிச் சலுகைகளுடன் தனியார் துறைசார் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை எங்கள் தொலைநோக்கு திட்டங்களில் கொண்டுள்ளோம். அபிவிருத்தி இடைவெளிகளைக் குறைப்பதற்கும், பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதற்குமாக பின்வரும் துறைகளில் தேவைப்படும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை முன்மொழிகிறோம். 

  • போரினால் சிதைந்த கைத்தொழில்களுக்கு புத்துயிர் அளித்தல்: பரந்தன் இரசாயன தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் மற்றும் ஓட்டுசுட்டான் கூரையோட்டுத் தொழிற்சாலை போன்ற பிராந்தியத்தின் கைத்தொழில்களுக்கு புத்துயிர் அளித்து பிராந்திய பொருளாதார மையமாக யாழ்ப்பாணத்தை மீட்டெடுத்தல். 
  • புதுப்பிக்கத்தக்க சக்தி: வடக்கு மாகாணத்தில் காற்று, சூரிய, உயிரியல், கடலலை ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றின் திறனைப் பயன்படுத்துதல்.
  • இந்திய துணைக் கண்டத்திற்கான இணைப்பு: வடகிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான அதிவேக கடற்பாலம், காங்கேசன்துறை துறைமுகத்தின் மேம்பாடு, யாழ்ப்பாண ஈர்வதேச விமான நிலையம் ஆகியன பிராந்திய பொருளாதார மையமாக புத்துயிர் பெற இணைப்பை மேம்படுத்தும்.
  • முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள்: அச்சுவேலி காங்கேசன்துறை, பரந்தன் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் முதலீடுகளை ஈர்க்கவும் Санамс வாய்ப்புகளை உருவாக்கவும் முதலீட்டு ஊக்குவிப்பு லையங்களை நிறுவுதல்.
  • வடக்கிற்கான நீர் திட்டம்: நிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான ஆறு நீட்டத்தை அமுல்படுத்துதல்.
  • சுற்றுலா வளர்ச்சி: இராமாயண பாதை அமைப்பு மற்றும் தீவுகளை அபிவிருத்தி செய்தல் உட்பட வடக்கில் சுற்றுலா துறையை மேம்படுத்துதல்.
  • சொகுசு கப்பல் சுற்றுலா மற்றும் படகு சேவைகள்:யாழ்ப்பாணத்துக்கும் தென்னிந்தியாவுக்குமிடையில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்தல்.

இந்த முன்மொழிவுகள் வெறும் கோரிக்கைகள் மட்டுமல்ல, வடக்கு மாகாண மக்களுக்கான நிலையான சமாதானம், செழிப்பு மற்றும் சமத்துவத்தை அடைவதற்கான அத்தியாவசிய நடவடிக்கைகளாகும்.

உங்களின் தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்புடன், இந்த அபிலாஷைகள் நனவாகும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த முயற்சிகளுக்கான உங்களது அர்ப்பணிப்பு வடக்கு மாகாணத்தை உயர்த்துவது மட்டுமன்றி எமது முழு தேசத்தின் ஒற்றுமையையும் அபிவிருத்தியையும் பலப்படுத்தும். யாழ்ப்பாண மக்களாகிய நாங்கள், வளமான இலங்கைக்கான உங்களின் தலைமைத்துவத்திற்கும் தொலைநோக்குப் பார்வைக்கும் ஆதரவளிக்க தயாராக இருக்கின்றோம்.

உங்கள் கவனத்திற்கும் கருத்திற்கும் நன்றிகூறி உங்கள் நேர்மறையான பதிலையும் அசைக்க முடியாத ஆதரவையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாம் ஒன்றுபட்டால், நம் மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும்

Social Share

Leave a Reply