இந்தியா இலங்கை போட்டி சமநிலையில் நிறைவு.

பலமான இந்தியா துடுப்பாட்டத்தை ஆட்டம் காண வைத்த இலங்கை பந்துவீச்சு. Sri Lanka vs India 1st ODI Tied.

இந்தியா, இலங்கை அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 231 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இந்தியா அணி சிறந்த ஆரம்பம் ஒன்றை மேற்கொண்டது. ரோஹித் ஷர்மா அதிரடியாக துடுப்பாடினார். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 75 ஓட்டங்கள். இதில் சுப்மன் கில் 16 ஓட்டங்களை மட்டுமே பெற்று முதலில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் ஷர்மா 47 பந்துகளில் 58 ஓட்டங்களை பெற்ற வேளையில் ஆட்டமிழந்தார். இருவரையும் டுனித் வெல்லாளஹே ஆட்டமிழக்க செய்தார். அதன் பின்னர் வொசிங்டன் சுந்தர் 05 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்கள் என்ற நிலைமை இந்தியா அணிக்கு ஏற்பட்டது. நிதானமாக துடுப்பாடிய விராத் கோலி 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சொற்ப வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 24.2 ஓவர்களில் 132 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்தியா அணி தடுமாறியது. இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பு உருவானது. முதல் 4 விக்கெட்களுமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வீழ்ந்தன.

தடுமாறிய இந்தியா அணியை லோகேஷ் ராகுல், அக்சர் பட்டேல் இணைந்து மீட்டு எடுத்தனர். 57 ஓட்ட இணைப்பாட்டத்தை வனிந்து முறியடித்தார். ராகுல் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களில் 35 ஓட்டங்கள் வெற்றிக்கு தேவை என்ற நிலை உருவானது. இந்த நிலையில் சரித் அசலங்கவின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் குல்தீப் யாதவ் 02 ஓட்டங்களுடன் வனிந்துவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஷிவம் டூபே இறுதி நேரத்தில் அதிரடியாக துடுப்பாடி போட்டியை சமன் செய்த வேளையில் 25 ஓட்டங்களுடன் சரித்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் சரித் விக்கெட்டை கைப்பற்ற போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இரு அணிகளுக்குமிடையில் சமநிலையில் நிறைவடைந்த இரண்டாவது போட்டி இது.

இந்தியா அணி 47.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் டுனித் வெல்லாளஹே சிறப்பாக பந்துவீசினார். 10 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி விக்கெட்களை வீழ்த்தினார். அகில தனஞ்சய 10 ஓவர்களில் 40 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை வீழ்த்தினார். வனிந்து ஹசரங்க 10 ஓவர்களில் ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்டுகளை தனதாக்கினார். சரித் அசலங்க 8.5 ஓவர்களில் 30 ஓட்டங்களை வழங்கி 03 விக்கெட்களை கைப்பற்றினார். இன்று அறிமுகத்தை மேற்கொண்ட மொஹமட் சிராஸ் பிராகாசிக்க முடியமால் போனது. அசித்த பெர்னாண்டோ 06 ஓவர்களில் 34 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார்.

முதலில் துடுப்பாடிய இலங்கை அணி இலங்கை அணி 50 ஓவர்களில் 09 விக்கெட்களை இழந்து 231 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டம் மூலமா பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற முடியாமல் போனது. பின் வரிசை துடுப்பாட்ட வீரர்களது உதவியோடு போராடக்கூடிய ஓட எண்ணிக்கையினை பெற்றுக்கொண்டது. குறிப்பாக டுனித் வெல்லாளகே தனித்து நின்று போராடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்திக் கொடுத்தார். இறுதி நேரத்தில் அவர் பெற்ற ஓட்டங்கள் இலங்கை அணி போராடக்கூடிய நிலையை ஏற்படுத்தியது. அவர் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இது அவரின் முதலாவது ஒரு நாள் சர்வதேசப் போட்டி அரைச்சதமாகும். இவருக்கு இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம் வழங்க வேண்டும் என்பதனை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்.

இலங்கை அணி துடுப்பாடும் வேளையில் ஆரம்பம் முதலே ஒரு பக்க விக்கெட்கள் வீழந்தன. ஆரம்பத்தில் பத்தும் நிஸ்ஸங்க அரைச்தத்தை பூர்த்தி செய்து ஒரு பக்க விக்கெட்டை பாதுகாத்தார். அவர் 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடந்து டுனித் காப்பாற்றி வந்தார். ஆனால் அணிக்குள் எடுப்பதும் வெளியியேற்றுவதுமாக உரிய வாய்ப்பை கொடுக்காமல் விடுவது இலங்கை அணிக்கு பாதிப்பே. இந்த இருவரது ஓட்டங்களே அணியை காப்பாற்றியது. ஜனித் லியனகே 20 ஓட்டங்களையும், வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் அவிஷ்க பெர்னாண்டோ 01 ஓட்டத்துடனும், குஷல் மென்டிஸ் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். மத்திய வரிசையில் சதீர சமரவிக்ரம 08 ஓட்டங்களுடனும், சரித் அசலங்க 14 ஓட்டங்களையும் பெற்றனர். அகில தனஞ்சய 17 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் டுனித் மற்றும் அகில தனஞ்ஜய இருவரும் இணைந்து 46 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாற இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக பிரகாசித்துளள்னர். இந்தியா அணியின் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் 02 விக்கெட்களையும், வொசிங்டன் சுந்தர் 02 விக்கெட்களையும், மொகாமட் சிராஜ், ஆர்ஷீப் சிங், சிவம் டூபே, குல்தீப் யாதவ், ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version