பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்க வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டு முறைமையை இரத்துச் செய்யுமாறும் கோரியும் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் கடந்த மாதத்திலிருந்து அந்நாட்டு மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களினால் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களாக மாற்றமடைய பொலிஸார் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலரும் உயிரிழந்தனர்.
மீண்டும் வலுவடைந்துள்ள ஆர்ப்பாட்டங்களின் காரணமாக உயிரிழந்த 91 நபர்களில் 14 பொலிஸாரும் உள்ளடங்குகின்றனர்.
போராட்டக்காரர்களுக்கும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸாரினால் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நேற்றிலிருந்து(04.08) ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பங்களாதேஷ் பிரதமரின் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கடந்த மாதத்தில் மாத்திரம் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 10,000 பேர் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.