அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாதுகாக்க ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி

கல்வி, அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்ற போதிலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தவிர வேறு மாற்றுவழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

எனவே அந்த வேலைத்திட்டத்தை பாதுகாப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைவரும் முன்வர வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறினார்.

திருகோணமலை ஹோட்டல் சங்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை பீச் ரிசோர்ட் ஹோட்டலில் நேற்று (04.08) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

திருகோணமலையை சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கிய ஜனாதிபதி, நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 25 இலட்சத்தில் இருந்து 50 இலட்சமாக அதிகரிப்பதற்கான மூலோபாய திட்டங்களையும் விளக்கினார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை விஸ்தரிக்கும் வகையில் பாரிய அளவிலான ஹோட்டல்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் மற்றும் திருகோணமலையை சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய இடமாக மாற்றுவதில் ஹோட்டல் சங்கங்கள் ஆற்றக்கூடிய பங்கு குறித்து ஜனாதிபதி இங்கு கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று (04.08) காலை திருகோணமலையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக உறுதியளித்த சட்டத்தரணிகள் சங்கம், இரண்டு வருட குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட அர்ப்பணிப்பை பாராட்டியது.

திருகோணமலை, கிண்ணியா, குச்சவெளி ஆகிய இடங்களில் தற்போதுள்ள நீதிமன்ற வளாகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பிரதேசத்திலுள்ள சட்டத்தரணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது என்பன தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்ததோடு அது தொடர்பில் தேவையான
நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள, திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்க அமைப்பாளர் இராமலிங்கம் திருக்குமரநாதன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version