ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 462 பட்டதாரிகள், 14 நாட்கள் கடந்தும் நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று(06.08) தெரிவித்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு கணிதம், இரசாயனவியல், உயிரியல், பௌதிகவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்காக பட்டதாரிகளுக்கு 1,700 புதிய ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும், அவர்களுள் 462 பேர் இதுவரையில் நியமனங்களை பெற்றுக் கொள்ளவில்லை எனவும் கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியா, பதுளை உட்பட வெளி மாவட்டங்களில் ஆசிரியர்களாக பணியமர்த்தபடுவதினால், ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொள்வதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த 462 ஆசிரியர்களுக்கு பதிலாக, மதிப்பெண்களின் அடிப்படையில் அடுத்த இடங்களில் உள்ள விண்ணப்பதாரர்களின் பட்டியலை வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.