சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் கடந்த ஜூலை மாதத்திற்கான சிறந்த வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். அதன்படி, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவியான சமரி அத்தபத்து ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் கடந்த ஆண்டிற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட சமரி அத்தபத்து, மூன்றாவது முறையாகவும் ஜூலை மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவாகியுள்ளார். அவர் கடந்த வருடம் செப்டம்பர் மற்றும் இந்த வருடம் மே மாதங்களுக்கான சிறந்த வீராங்கனையாக தெரிவாகியிருந்தார்.
மூன்றவாது முறையாகவும் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்ட 3வது வீராங்கனையாக 34 வயதான சமரி அத்தபத்து பதிவானார். இதற்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளின் ஹெய்லி மெத்தியுஸ் 3 முறைகளும், அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் 4 முறைகளும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மகளிர் ஆசிய கிண்ணத்தை முதல் முறையாக இலங்கை அணி கைப்பற்றுவதற்கு முக்கிய காரணியாக இருந்த அணித் தலைவி சமரி அத்தபத்து, ஆசியக் கிண்ணத் தொடரில் 304 ஓட்டங்களை இலங்கை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இலங்கையிலும், பிற நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடும் மற்றும் தங்கள் நாட்டிற்காக விளையாட விரும்பும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இந்த அங்கீகாரம் ஊக்கமளிக்கும் வகையிலான செய்தியை வழங்கும் என சமரி அத்தபத்து நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.