
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய லங்கா பொதுஜன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜனக ரத்நாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளர் நிஹால் பிரேமகுமார தேசப்பிரிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(14.08) ஜனக ரத்நாயக்கவின் சார்பில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
கடந்த வருடம் மே மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டார். இந்த பதவி நீக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்க பெற்றிருந்தன.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அமைச்சர்களுக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகளும் ஏற்பட்டிருந்தன.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் உறுதியாக போட்டியிடவுள்ளதாக கடந்த வருடமே அவர் தெரிவித்திருந்தார். அதற்கமைய தற்பொழுது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று(14.08) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.