அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கு இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் முதலாவது போட்டியில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
அயர்லாந்து, பெல்பாஸ்டில் இன்று(16.08) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 260 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் விஷ்மி குணரத்ன 101(98) ஓட்டங்களையும், ஹசினி பெரேரா 46(72) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அயர்லாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இன்றைய போட்டியின் போது இலங்கை மகளிர் அணி சார்பில் சர்வதேச போட்டியொன்றில் சதம் கடந்த 2வது வீராங்கனையாக விஷ்மி குணரத்ன பதிவானர். இதற்கு முன்னர் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீராங்கனை சமரி அத்தபத்து மாத்திரம் இலங்கை மகளிர் அணிக்காக சதம் அடித்திருந்தார்.
261 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. அயர்லாந்து அணி சார்பில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 122(107) ஓட்டங்களையும், ஆமி ஹண்டர் 42(45) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, அயர்லாந்து மகளிர் அணி 3 விக்கெட்டுக்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் முன்னிலையிலுள்ளது. போட்டியின் ஆட்ட நாயகியாக அயர்லாந்து அணியின் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் தெரிவு செய்யப்பட்டார்.