
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி பங்கேற்ற பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இங்கிலாந்து, வொர்செஸ்டரில் நடைபெற்ற போட்டியின் இறுதி நாளான இன்று(17.08) 122 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் 2வது இன்னிங்ஸிற்காக ராப் யேட்ஸ் 57(75) ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதன்படி, இலங்கை அணிக்கு எதிரான 4 நாள் பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.
போட்டியின் முதலாம் நாள் விபரம்
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி பங்கேற்கும் பயிற்சிப் போட்டி கடந்த 14ம் ஆரம்பமாகியது.
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இந்த போட்டி இங்கிலாந்து, வொர்செஸ்டரில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 26(38) ஓட்டங்களையும், பிரபாத் ஜயசூரிய 20(45) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். ஏனைய வீரர்கள் 20 விட குறைவான ஓட்டங்களையே பெற்றுக்கொண்டனர்.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் பந்துவீச்சில் சமன் அக்தர் 5 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹல் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பின்னர், முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலாவது நாள் ஆட்டநேர முடிவின் போது 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
போட்டியின் இரண்டாம் நாள் விபரம்
போட்டியின் இரண்டாம் நாளன்று முதலாவது இன்னிங்ஸிற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி ஆட்ட நேர முடிவின் போது சகல விக்கெட்டுக்களையும் இழந்து 324 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து லயன்ஸ் அணி சார்பில் ஹம்சா ஷேக் 91(204) ஓட்டங்களையும், கேசி ஆல்ட்ரிட்ஜ் 78(96) ஓட்டங்களையும், பென் மெக்கின்னி 46(40) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய 5 விக்கெட்டுக்களையும், கசுன் ராஜித 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதற்கமைய இங்கிலாந்து லயன்ஸ் அணி இந்த போட்டியில் 185 ஓட்டங்கள் முன்னிலையிலிருந்தது.
போட்டியின் மூன்றாம் நாள் விபரம்
போட்டியின் மூன்றாம் நாளான நேற்றைய(16.08) தினம் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 87.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் நிசன் மதுஷ்க 77(88) ஓட்டங்களையும், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 66(147) ஓட்டங்களையும், அஞ்சலோ மெத்தியூஸ் 51(112) ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 43(73) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதற்கமைய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணி: நிசன் மதுஷ்க, திமுத் கருணாரத்ன, குசல் மென்டிஸ், அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜயசூரிய, மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித, லஹிரு குமார