மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தடையாக நிற்கும் ஜே.வி.பி 

மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு தடையாக நிற்கும் ஜே.வி.பி 

மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்குவதற்கு தேவையான புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சி (ஜே.வி.பி) மற்றும் குறித்த கட்சியின் தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களிலிருந்தே தடைகளை ஏற்படுத்தி வருவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

நாளொன்றுக்கு சுமார் 16 மணித்தியாலங்கள் மின்சாரமின்றி மக்கள் பிரச்சினைகளை எதிர் நோக்கிய போது அரசாங்கம் மேற்கொண்ட கடினமான தீர்மானங்களின் காரணமாகவே தற்பொழுது தடையின்றி மின்சாரத்தை வழங்க முடிந்துள்ளதாக, கொழும்பில் இன்று(20.08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், 

“நம் நாட்டில் மின்சார நெருக்கடியை ஏற்படுத்திய அரசியல் குழுக்கள் உள்ளன. பொருளாதார நெருக்கடியால் 16 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. ரஷ்யா-உக்ரேன் போர் மற்றும் டொலரின் பெறுமதி அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்களினால் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தன. இதன் காரணமாக விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டமையினால், மின்சாரத்தை தடையின்றி வழங்க முடிந்தது, மின்சார சபையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடிந்தது. மின்சாரச் செலவை மேலும் குறைக்க வேண்டும் என்றால், குறைந்த செலவில் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என அனுரகுமார திசாநாயக்க கூறுகிறார். 

சூரிய மின் நிலையங்கள், காற்றாலை மின் நிலையங்கள் உள்ளிட்ட புதிய மின் உற்பத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டடு, பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச்சூழல் தாக்கத்தை காரணம் காட்டி இத்தகைய திட்டங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி கட்சி மற்றும் குறித்த கட்சியின் தொழிற்சங்கங்களே எதிர்ப்பினை தெரிவித்தன. 

இவ்வாறே, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை மறுசீரமைக்க வேண்டுமென அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அதற்கு எதிர்ப்பினை வெளியிடுகின்றன. 

இத்தகைய விடயங்கள் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்கவுடன் விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்” என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply