வவுனியாவில் சிசு பலி – வைத்தியர் காரணம் என முறைப்பாடு

வவுனியாவில் சிசு பலி - வைத்தியர் காரணம் என முறைப்பாடு

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காத காரணத்தால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த 17ம் திகதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண், உரிய நேரத்திற்குள் தன்னை சத்திரசிகிச்சைக்கு எடுக்காமையால் தனது குழந்தை உயிரிழந்ததாக குற்றம் சுமத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது.

இதனிடையே வைத்தியர் ஒருவரின் அலட்சியம் காரணமாகவே
தனது குழந்தை உயிரிழந்ததாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குழந்தையின் தந்தை இன்று(21.08) முறைப்பாடளித்துள்ளார்.

தனது குழந்தை உயிரிழந்தமை குறித்து அவர் கூறியதாவது,

“வவுனியா – செட்டிகுளத்தில் வசிக்கும் நான் எனது மனைவியை பிரவசத்திற்காக கடந்த 17 ஆம் திகதி வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தேன். அவருக்கான மருந்துகள் வழங்கப்பட்ட நிலையில் அவரது பன்னீர்குடம் உடைந்ததன் பின்னர் தாதி ஒருவருக்கு தெரியப்படுத்தினார்.

இதன்போது அங்கு கடமையிலிருந்த வைத்தியர் ஒருவர் தொலைபேசியினை பயன்படுத்திக் கொண்டு கவனம் செலுத்தவில்லை.
பின்னர் வலிக்குரிய மருந்தினை மனைவிக்கு கொடுத்துவிட்டு உறங்குமாறு தெரிவித்துள்ளனர்.

மறுநாள் வைத்தியசாலைக்கு வருகைத்தந்த வைத்திய அதிகாரி ஒருவர் அறுவை சிகிச்சை செய்திருக்கலாம் என கடமையிலிருந்த வைத்தியரிடம் கேட்டார்.

பின்னர் மீண்டும் மாலை 05 மணிக்கு எனது மனைவியை சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து சென்றனர். பலமணி நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை.

இதற்குள் 07ஆம் விடுதியில் குளிரூட்டி இயங்கவில்லை என தெரிவித்து 05 ஆம் விடுதிக்கு எனது மனைவியை மாற்றியுள்ளனர். அழைப்பு வந்ததன் பின்னர் வைத்தியசாலைக்கு சென்ற போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் எனது குழந்தையினை அனுமதித்திருந்தார்கள்.

குழந்தையின் உடல் நிலையில் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவித்து குழந்தையினை எனக்கு காட்டினர். பின்னர் நேற்று(20.08) இரவு எனது குழந்தை இறந்துவிட்டதாக கூறினார்கள்.

வைத்தியர்களின் அலட்சியம் காரணமாகவே எனது குழந்தை உயிரிழந்தது. அவர்கள் பதில் கூற வேண்டும். எனக்கு நீதி கிடைக்காமல் நான் குழந்தையை பொறுப்பெடுக்கமாட்டேன் ” என்றார்.

Social Share

Leave a Reply