
வரலாற்றிலேயே ஆட்சியில் இருந்துக்கொண்டு, நாட்டின் அரசியல் யாப்பில் இருக்கும் சட்டங்களை மீறி செயற்பட்ட முதலாவது ஜனாதிபதி, ரணில்
விக்ரமசிங்க என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (22.08) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தேவையான நிதியை வழங்காமல் உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்து, ஜனாதிபதி வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சட்டங்களுக்கு மதிப்பளிக்காது செயற்படும் தற்போதைய ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு
முயற்சி செய்கிறார்.
ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்காது செயற்பட்டவரே ரணில் விக்ரமசிங்க. மக்கள் இதனை நன்றாகப் புரிந்துக்கொள்ள வேண்டும். அதனை உயர் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.
இவ்வாறானாதொரு ஜனாதிபதியை வெற்றிப்பெறச் செய்தால் நாட்டினுடைய நிலைமை என்ன?
தேர்தலில் தோல்வி அடைவோம் என்பதால் தேர்தலை ஒத்திவைத்து மக்களின் வாக்குரிமையை மீறியுள்ளனர்.
அவருடைய தேவைக்காகவே தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பினூடாக தெளிவாக அறிய முடிகின்றது.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்காமல் சட்டத்தையும்
மக்களின் உரிமையையும் மதிக்க கூடிய ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும்” என்றார்.