
குரங்கம்மைத் தொற்று உலகளவில் அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாடு முழுவதும், நோய் தொற்றை இனங்காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்குள் குரங்கம்மைத் தொற்றைக் கொண்டு வரக்கூடிய பயணிகளைக் கண்டறிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலிதமஹிபாலவெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் குரங்கம்மை நோய் கண்டறியப்பட்டால், அதற்குத் தேவையான சிகிச்சை மையம் கொழும்பில் அமைக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் தொற்றைக்கண்டறிவதற்குத் தேவையான ஆய்வுகூட பரிசோதனைகளுக்கான உபகரணங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், உரிய அதிகாரிகளுக்குத் தேவையான பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குரங்கம்மைத் தொற்றை பொதுச் சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள நிலையில், இலங்கையிலும் தொற்றின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.