ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்ட சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களை விட குறைவாக உள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அநுரகுமார திஸாநாயக்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனம் ஜனாதிபதியின் பிரகடனத்தை விட அதிகம் என்பதை நம்ப முடிகிறதா? இதனை பொதுமக்கள் நம்புவார்களா? மோசடி இடம்பெற்றுள்ளதென்றே கூற வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்கவின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பிரகடனம் சரியானதா என ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க ஆராய வேண்டிய முதல் பணியாக நான் கருதுகின்றேன்.
ரணில் விக்கிரமசிங்க எவ்வாறு வருமானம் ஈட்டினார் என்பது பொதுமக்களுக்குத் தெரியும். இந்த வருமானத்தில் மத்திய வங்கியின் மோசடி பணமும் உள்ளது. அவை வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது” என்றார்.