கடந்த 7 வருடங்களில் தன்னுடைய நாட்டிற்கு வெளியில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ள பங்களாதேஷ் அணி,
பாகிஸ்தான்-ராவல்பிண்டியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியை முதன்முறையாக வீழ்த்தியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 21ம் திகதி ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட் இழப்பிற்கு 448 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது. பாகிஸ்தான் அணிக்காக மொஹமட் ரிஸ்வான் 171 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 141 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர், முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 565 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. முஷ்பிகுர் ரஹீம் 191 ஓட்டங்களையும், ஷத்மான் இஸ்லாம் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
117 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
30 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு போட்டியின் இறுதி நாளான இன்று(25.06) களமிறங்கிய பங்களாதேஷ் அணி 6.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை கடந்தது. இதனூடாக 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற ரீதியில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றது. போட்டியின் ஆட்ட நாயகனாக பங்களாதேஷ் அணியின் முஷ்பிகுர் ரஹீம் தெரிவு செய்யப்பட்டார்.
தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 30ம் திகதி பாகிஸ்தான்-ராவல்பிண்டியில் ஆரம்பமாகவுள்ளது.