2023ம் நிதியாண்டில் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் நிகர வருமானம் 12.1 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் வருமானம் 105 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் 2023 நிதியாண்டிற்கான நிதி அறிக்கை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று(24.08) நடைபெற்ற கூட்டத்தின் போது நிதியறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட், நிறுவனங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்பட்ட நிதி போன்ற காரணங்களினால் ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் வருமானம் அதிகரித்துள்ளது.
சட்டங்களை உரிய முறையில் கடைப்பிடிக்கின்றமை, நிதி வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட காரணங்களினால் நிதி அறிக்கைக்குத் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.