இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியின் மூன்றாம் நாளில் இங்கிலாந்து அணி 482 ஓட்டங்கள் முன்னிலை பெற்று சகல விக்கெட்டுகளையும் இழந்து 483 ஓட்டங்களை இலங்கை அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. .
இங்கிலாந்து லோட்ஸ் மைதானத்தில் நேற்றுக்கு முற்தினம் (29.08) ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 54.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. டான் லோரன்ஸ் 7 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 24 ஓட்டங்களையும், ஒலி போப் 17 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் 103 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். இது அவரின் 34 ஆவது சதமாகும். அத்தோடு லோட்ஸ் மைதானத்தில் அதிக ஓட்டங்களை பெற்ற மயில்க்கல்லை தொட்டுள்ளார். ஹரி ப்ரூக் 37 ஓட்டங்களுக்கும், ஜேமி ஸ்மித் 26 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். க்றிஸ் வோக்ஸ் 5 ஓட்டங்களுக்கும், கஸ் அட்கின்சன் 14 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். மத்தியூ பொட்ஸ் 2 ஓட்டங்களுக்கும், ஒலி ஸ்டோன் 7 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஷொயிப் பஷீர் 1 ஓட்டத்தினை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணிக்காக பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மிலான் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
முதலாவது இன்னிங்சில் துடுப்பாடிய இலங்கை அணி 55.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. இலங்கையின் ஆரம்ப விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்த்தப்பட்டன. இதனாலேயே இலங்கை அணி தடுமாற வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியில் கமிந்து மென்டிஸ் நிதானமாகவும் அதிரடியாகவும் துடுப்பாடி இலங்கை அணியை மீட்டெடுத்தார். நிஷான் மதுஷ்க, திமுத் கருணாரத்ன ஆகியோர் 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். பத்தும் நிசங்க 12 ஓட்டங்களுக்கும், அஞ்சலோ மத்தியூஸ் 22 ஓட்டங்களுக்கும், தினேஷ் சந்திமால் 23 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். தனஞ்ஜய டி சில்வா ஓட்டங்களை எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். கமிந்து மென்டிஸ் 74 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். மிலான் ரத்நாயக்க 19 ஓட்டங்களுக்கும், பிரபாத் ஜயசூரிய 9 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். லஹிரு குமார ஓட்டங்களை எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். அசித்த பெர்னாண்டோ 1 ஓட்டத்தை பெற்றார்.
இங்கிலாந்து அணிக்காக பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒலி ஸ்டோன், மத்தியூ பொட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ஷொயிப் பஷீர் 1 விக்கெட்டினையும் கைப்பற்றிக்கொண்டனர்.
முதலாவது இன்னிங்சில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 427 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டான் லோரன்ஸ் 9 ஓட்டங்களுக்கும், அணித் தலைவர் ஒலி பொப் 1 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். மறுபுறம் பென் டக்கெட் 40 ஓட்டங்களுக்கும், ஹரி ப்ரூக் 33 ஓட்டங்களுக்கும், ஜமி ஸ்மித் 21 ஓட்டங்களுக்கும், க்றிஸ் வோக்ஸ் 6 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர். அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஜோ ரூட் 143 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். இது அவரின் 33 ஆவது சதமாகும். இறுதி நேரத்தில் இங்கிலாந்து அணிக்காக கஸ் அட்கின்சன் அதிரடியாக துடுப்பாடி 118 ஓட்டங்களை பெற்று அவரது முதலாவது டெஸ்ட் சதத்தையும் முதலாவது முதல் தரப்போட்டி சதத்தையும் பூர்த்தி செய்துள்ளார். மத்தியூ பொட்ஸ் 21 ஓட்டங்களையும், ஒலி ஸ்டோன் 15 ஓட்டங்களையும், ஷொயிப் பஷீர் 7 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அசித்த பெர்னாண்டோ 5 விக்கெட்களையும், மிலன் ரத்நாயக்க, லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூரிய ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி – தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), திமுத் கருணாரத்ன, நிசன் மதுஷ்க, பத்தும் நிசங்க, அஞ்சலோ மெத்தியூஸ், தினேஷ் சந்திமல், கமிந்து மென்டிஸ், அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய
இங்கிலாந்து அணி – ஒலி பொப்(அணித் தலைவர்), ஹரி ப்ரூக், பென் டக்கெட், டான் லோரன்ஸ், ஜோ ரூட், ஜமி ஸ்மித், க்றிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மத்தியூ பொட்ஸ், ஷொயீப் பஷீர், ஒலி ஸ்டோன்