ஜேவிபியினர் தேர்தல் உட்பட தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காகப் பெற்றுக்கொண்ட பணம், சந்தேகத்திற்கிடமான வழிகளில் கிடைக்கப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
ஜேவிபி எவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொள்கின்றது என்பதினை முடியுமென்றால் வெளிப்படுத்துமாறு, கொழும்பில் இன்று(31.08) நடைபெற்ற ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்திருந்தார்.
.இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“அனுரகுமார பெரும் செல்வந்தராக மாறுவதற்கு முயற்சிக்கின்றார். தற்போது அவருடைய கைகளில் ரோலேக்ஸ் கை கடிகாரம் மாத்திரமே குறைவாக இருக்கின்றது. அவர் ஹிட்லரைப் போன்றவர். ஹிட்லரின் பின்புலம் தொடர்பில் யாருக்கும் தெரியாது.
மக்கள் விடுதலை முன்னணிக்கு முடியுமென்றால், அவர்கள் இதுவரையில் பெற்றுள்ள பணத்தை எவ்வாறு பெற்றுக் கொண்டார்கள் என்பதினை வெளிப்படுத்துமாறு சவால் விடுக்கின்றேன். திருடர்களிடமா அல்லது தீவிரவாதிகளிடமா, எவ்வாறு பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள்?
ஜேவிபியினர் தேர்தலுக்கு மாத்திரமல்ல, தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கும் இவ்வாறு பெற்றுக்கொண்ட பணத்தையே பயன்படுத்துகின்றனர்.
ஜேவிபியை பொறுத்த வரையில் பொருளாதார பிரச்சினைகளிலிருந்து வெளியே வருவதற்கு மூன்று திட்டங்களே காணப்படுகின்றனர். அரச நிறுவனங்களை விற்பனை செய்ய வேண்டும், பணம் அச்சிட வேண்டும், நிலையான வைப்புகளிலுள்ள பணத்தை வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு பெற்றுக் கொள்ளும் பணம் போதுமானதல்ல.
நாட்டினுடைய கடனை அடைப்பதற்கு இவர்களிடம் உள்ள திட்டம் என்ன?” என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.