சுமந்திரன் மக்களைக் குழப்புகின்றார் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு

சுமந்திரன் மக்களைக் குழப்புகின்றார் - அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றச்சாட்டு

இலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் தனிப்பட்ட முடிவு என்றும், அவர் மக்களைக் குழப்புகின்றார் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று(02.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் அறிவித்த முடிவு தொடர்பில் தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ள நிலையில், சுமந்திரன் தனியாக இவ்வாறான தீர்மானத்தை எடுத்துள்ளார் என சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரன் இவ்வாறு செயற்படுவது முதற்தடவை அல்ல எனவும், தன்னுடைய தனிப்பட்ட விருப்புக்களை மக்களிடம் திணிக்க முயற்சிக்கின்றார் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று(01.09) நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் கூட்டத்தின் போது, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இருப்பினும், குறித்த தீர்மானம் சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானம் எனத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

ஆனால், குறித்த தீர்மானம் 30 பேர் கொண்ட கட்சியின் செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்டது எனவும், அந்த கூட்டத்திற்கு மாவை சேனதிராஜா பங்கேற்றிருக்க வில்லை எனவும் அக் கட்சியின் செயலாளர் சத்தியலிங்கம் தெரிவித்திருந்தார். 

Social Share

Leave a Reply