அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் நேற்றைய தினம்(02.09) வெளியிடப்பட்ட அறிக்கை தேர்தல் சட்டங்களை மீறுவதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியினால் தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(04.09) தபால் மூலமான வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில், ஜனாதிபதியினால் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டமை தேர்தல் சட்டங்களை மீறும் செயற்பாடு எனக் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து, இதனுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையை மீளப் பெற்றுக்கொள்ளுமாறும் ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட உதய.ஆர்.செனவிரத்ன தலைமையிலான நிபுணத்துவ குழுவின் பரிந்துரைகளைச் செயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
அதன்படி 2025 ஜனவரி 1ம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று(02.09) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.