மாதாந்தம் மகாபொல கிடைப்பதில்லையென குற்றச்சாட்டு

மாதாந்தம் மகாபொல கிடைப்பதில்லையென குற்றச்சாட்டு

இலங்கையில் சிறுவர்களுக்கான மந்த போசன நிலமை அதிகரித்துக் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு சிக்கலான நிலையிலும் அரசாங்கத்திடம் போசணைக் கொள்கை திட்டம் ஒன்று இல்லை என அவர் இன்று (04.08) பாராளுமன்றில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“2022 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் கைக்குழந்தைகள் மற்றும் இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிறை குறைவான மற்றும் வளர்ச்சி குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த சிக்கலுக்கு பின்னரான ஆய்வுகளின் படி வீடுகளில் நான்கில் ஒரு பங்கு நடுத்தரமான அளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு (உயரம் குறைவு) 19.3 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 9.2% ஆல் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பின் பிரகாரம் 5- 18 வயதுக்குட்பட்டவர்களில் 37.4% ஆகவும் அல்லது 10-17 வயதுக்குட்பட்டவர்களில்1/3 பங்கினர் வளர்ச்சி குன்றியவர்களாக (கட்டையான) அல்லது அதிக எடை கொண்டவர்களாக அல்லது உடற்பருமன் அதிகரித்தவர்களாக காணப்படுகின்றார்கள். இதற்கு பல போசணைக் குறைபாடுகள் காரணமாக இருக்கின்றன.

இந்த இலக்கை பூரணப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் அவசியமாகும். இதனை கண்காணிப்பதற்கான முறையொன்றும் இருக்க வேண்டும். தேசிய போசணைக் கொள்கை திட்டம் ஒன்றும் இல்லை. எனவே பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவையும் வழங்க வேண்டும். ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு முன்பாக இவற்றுக்காக நிதி ஒதுக்கப்பட வேண்டும். இவை எதுவும் இல்லாமல் ஜனாதிபதியின் நிதியத்திற்கு கோடிக்கணக்கான பணத்தை ஒதுக்குவதற்கு அனுமதிக்க முடியாது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தை தலைமுறையே சீரழிந்து செல்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 மகாபொல தொகையை 10 000 ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது.

பலவிதமான சலுகைகளைப் பெற்றுக் கொடுக்கவும், உறுப்பினர்களை கொள்வனவு செய்து கொள்வதற்கும் பணம் உள்ளது. ஆனால் தேசிய போசனை கொள்கைக்காக பணம் இல்லை. அரசாங்கத்திடம் இவற்றிற்கு தீர்வும் இல்லை. இதுவரையும் மாதாந்தம் மகாபொல கிடைப்பதும் இல்லை. மகாபொல பத்தாயிரம் ஆக அதிகரிக்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை இதன் தாக்கம் அதிகரித்து இருக்கின்றது” என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Social Share

Leave a Reply