இலங்கை வரலாற்றில் இதுவரையில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஜனாதிபதியைத் தெரிவு செய்திருக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சஜித் பிரேமதாசவினூடாக இந்த விடயம் சாத்தியமாகியுள்ளதாக, நேற்று(03.09) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜே. சி. அலவத்துவல,
“இலங்கை வரலாற்றில் இதுவரையில் அனைவரும் ஒன்றுகூடி நாட்டின் தலைவரைத் தெரிவு செய்ததில்லை. வடக்கில் நடைபெற்ற யுத்தத்தின் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் தலைவரைத் தெரிவு செய்யும் வாய்ப்பை இழந்தனர்.
இதற்கு முன்னர் ஜனாதிபதிகள் தெரிவு செய்யப்படும் போது, மக்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் பெற்றுக்கொள்ளவில்லை. தனது வெற்றி பெரும்பான்மையான சிங்கள மக்களால் சாத்தியமானது என கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
பல வருடங்களின் பின்னர் சஜித் பிரேமதாசவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. அதைப்போலவே முஸ்லிம் கட்சித் தலைவர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது.
எதிர்வரும் 21ம் திகதி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக நியமிப்பதற்கு மக்கள் அனைவரும் ஒரே வரிசையில் நிற்கின்றனர். இது மிகவும் அரிதான சந்தர்ப்பம்” எனத் தெரிவித்துள்ளார்.