விடுதலையானார் அசாத் சாலி

மேல் மாகாணத்தின் முந்நாள் ஆளுநர் அசாத் சாலி இன்று (02/12) கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அசாத் சாலிக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மனுதாரர் தரப்பின் சாட்சி விசாரணைகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கடந்த நவம்பர் 19ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டிருந்தமையை தொடர்ந்து குறித்த வழக்கு இன்று தீர்ப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாம் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் அனைவரும் குர்ஆனில் கூறப்பட்டுள்ள சட்டங்களை மாத்திரமே ஏற்றுக்கொள்வதாகவும் நாட்டில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் குறித்து பொருட்படுத்துவதில்லை எனவும் கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது அசாத் சாலி கருத்து தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு பகிரங்கமாக தெரிவித்த கருத்து சர்ச்சைக்குரியது என சுட்டிக்காட்டிய சட்டமா அதிபரால், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டம் ஆகியவற்றின் கீழ் அசாத் சாலிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரதிவாதியை விடுதலை செய்யுமாறு அசாத் சாலி சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கமைய இன்று பிரதிவாதி அசாத் சாலி சகல குற்றச்சாட்டுக்களில் இருந்தும் முழுமையாக விடுதலை செய்வதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

விடுதலையானார் அசாத் சாலி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version