தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 9 தங்கப் பதக்கங்கள்

தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு 9 தங்கப் பதக்கங்கள்

இந்தியா, சென்னை ஜவஹர்லால் நேரு உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற 4வது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை 9 தங்கம், 9 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தை கைப்பற்றியது.

போட்டியை நடத்திய இந்தியா 21 தங்கம் உட்பட மொத்தமாக 48 பதக்கங்களுடன் முதலாம் இடத்தையும், பங்களாதேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.  

இறுதி நாளான நேற்று(13.09) இலங்கையின் ஹசித திஸாநாயக்க ஆண்களுக்கான முப்பாய்ச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். இதே போட்டியில் இலங்கையின் செனுர ஹன்சக வெள்ளிப் பதக்கம் வென்றார்.  

ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்ட போட்டியிலும் இலங்கை தங்கப் பதக்கத்தை வென்றது. ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற மெரோன் விஜேசிங்க, 4×400 மீட்டர் அஞ்சலோட்ட போட்டியிலும் இலங்கைக்குத் தங்கத்தைப் பெற்றுக்கொடுத்தார். இவர் தற்பொழுது தெற்காசியாவின் அதிவேக கனிஷ்ட வீரராக உள்ளார்.

ஆண்களுக்கான 110 மீற்றர் தடை தாண்டுதல் ஓட்டத்தில் சந்துன் கோஷலவும், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் சவிது அவிஷ்கவும், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தருஷி அபிஷேகாவும் தங்கப்பதக்கங்களைச் சுவீகரித்தனர்.

6 நாடுகள் பங்கேற்ற தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 29 ஆண் வீரர்களும், 25 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.

இம்முறை இலங்கை குழாமில் முல்லைத்தீவை சேர்ந்த ஜெயகாந்தன் விதுசனும் பங்கேற்றிருந்தார். இவர் ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டத்தில் போட்டியிட்டிருந்தார். கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்றதன் காரணமாகச் சர்வதேச அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றார்.

தெற்காசிய போட்டியில் 3000 மீட்டர் ஓட்டத்தில் ஜெயகாந்தன் விதுசன் 7ம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

Social Share

Leave a Reply