வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

வரப்பிரசாதங்களைத் தோட்ட மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதி

பெருந்தோட்ட மக்களுக்கு சகல சலுகைகளையும் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தோட்ட மக்களுக்கு லயன்களுக்கு பதிலாக கிராமங்களில் வாழும் உரிமையை வழங்கி சட்டபூர்வமான காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நுவரெலியாவில் நேற்று (15.09) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1994 இல் நுவரெலியா வந்தபோது தோட்டங்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுத்தேன். புதிய தோட்டங்களை அமைத்தோம். பின்னர் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து ஏனையோருக்கும் பிரஜாவுரிமை வழங்கினேன். நான் பிரதமராக இருந்த காலத்தில் உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த வஜீர அபேவர்தனவுடன் இணைந்து இப்பகுதியிலுள்ள பிரதேச சபைகளை அதிகரிக்குமாறு கூறினேன்.

பின்னர் ஜீவன் தொண்டமானுடன் சம்பள அதிகரிப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்திருக்கிறேன். தோட்டத்தில் முதியவர்களுக்கு அஸ்வெசும நிவாரணம் தருகிறோம். லயன்களை ஒழித்து கிராமங்களை உருவாக்குவோம். பிராஜவுரிமையை முழுமையாக வழங்க வழி செய்திருகிறோம்.

ஏற்றுமதி பொருளாதாரம், தேயிலை உற்பத்தியை அதிகப்படுத்தல், விவசாயத்தை நவீனமயப்படுத்தல், லயன்களை கிராமங்களாக மாற்றியமைத்தல், நவீன விவசாயத்தை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளை மலையகத்தில் முன்னெடுப்போம்.

தாஜ் ஹோட்டல் நுவரெலியாவில் அமைக்கப்படவுள்ளது. சீதா எலிய, நானுஓயா, மஸ்கெலியா போன்ற பகுதிகளை சுற்றுலா துறையின் கீழ் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்திருக்கிறோம்.

சுற்றுலா துறையின் ஊடாக வாழ்வாதாரத்தை அதிகரித்துக்கொள்ள வழி செய்வோம். தோட்டங்களில் வௌ்ளையர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளை, சுற்றுலா பயணிகளுக்கு வழங்குவோம். நிறைவேற்று அதிகாரிகளுக்கு புதிய வீடுகள் அமைக்கப்படும். காலியை போன்றே நுவரெலியாவையும் சுற்றுலாத் துறையில் முன்னேற்றுவோம்.

சஜித் எல்லாவற்றையும் இலவசமாக தருவதாகச் சொல்கிறார். தலைவலியையும் இலவசமாக தருவார். எல்லாவற்றையும் இலவசமாக தந்தால் நாட்டைக் கொண்டுச் செல்ல முடியுமா?

வரி குறைக்கப்படும், வரி வரம்பு அதிகரிக்கப்படும், விவசாய உபகரணங்களுக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமாரவும் சொல்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வேண்டும் என்ற ஆணையே எனக்கு கிடைத்தது. மக்கள் ஆணை கிடைக்கவில்லை. எனவே அடுத்த ஐந்து வருடங்களில் மக்கள் சுமையைக் குறைப்பதற்காகவே இப்போது மக்கள் ஆணையை கோருகிறோம்.” என்றார்.

Social Share

Leave a Reply