இத்தியா அணிக்கு அபார வெற்றி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 157 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளதோடு தொடர் தோல்வியிலிருத்து தப்பித்துள்ளது. கடந்த போட்டியில் மிக மோசமான தோல்வியினை சந்தித்த நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா அணி விளையாடியது. முதலாவது இன்னிங்சில் துடுப்பாட்டம் மோசமாக அமைய சார்தூள் தாகூரின் அதிரடி துடுப்பாட்டம் மூலம் சமாளிக்க கூடிய நிலையை பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி 91 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையில் இந்தப் போட்டியில் இந்தியா அணி வெல்லவே முடியாது என்ற எதிர்பார்ப்பு உருவானது. இருப்பினும் இரண்டாம் இன்னிங்சில் மிகவும் சிறப்பாக சகல வீரர்களது பங்களிப்போடும், ரோஹித் ஷர்மாவின் சதத்துடனும் வலுவான நிலையை அடைந்தது. இங்கிலாந்து அணி நல்ல ஆரம்பம் பெற்றதை தொடர்ந்து இங்கிலாந்து வெற்றி பெற்றுவிடுமோ என்ற நிலை உருவாக இந்தியா அணியின் அபார பந்துவீச்சு இங்கிலாந்து வீரர்களின் விக்கெட்களை தகர்த்தது. இந்த நிலையில் 10ஆம் திகதி இரு அணிகளுக்குமிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான போட்டி நடைபெறவுள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணி சமநிலையில் நிறைவு செய்தால் தொடரை கைப்பற்றி கொள்வார்கள். தோல்வியடைந்தால் தொடர் சமநிலையில் நிறைவடையும். இங்கிலாந்து அணி சொந்தமண்ணில் தடுமாறி வருகிறது.  2007 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற தொடரை இந்தியா 1-0 என வெற்றி பெற்றது. அதற்கு பிறகு நடைபெற்ற மூன்று தொடர்களிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த தொடரை இந்தியா அணி கைப்பற்றும் அல்லது சமநிலையில் நிறைவடையும்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்ய இந்தியா அணி துடுப்பாடியது. முதல் இன்னிங்சில் சகல விக்கெட்களையும் இழந்து 191 ஓட்டங்களை இந்தியா அணி பெற்றது. சர்தூல் தாகூர் 57 ஓட்டங்களையும், விராத் கோலி 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் 4 விக்கெட்களையும், ஒல்லி ரொபின்சன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் ஒலி பொப் 81 ஓட்டங்களையும், க்றிஸ் வோக்ஸ் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா ,ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இரண்டாம் இன்னிங்சில் இந்தியா அணி சகல விக்கெட்களையும் இழந்து 466 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரோஹித் ஷர்மா 127 ஓட்டங்களையும், செட்டேஸ்வர் புஜாரா 61 ஓட்டங்களையும், சர்தூல் தாகூர் 60 ஓட்டங்களையும், ரிஷாப் பான்ட் 50 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்றிஸ் வோக்ஸ் 3 விக்கெட்களையும், ஒல்லி ரொபின்சன், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

368 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்களையும் இழந்து 210 ஓட்டங்களை பெற்றது. இதில் ஹஸீப் ஹமீட் 63 ஓட்டங்களையும், ரோரி பேர்ன்ஸ் 50 ஓட்டங்களையும், பெற்றனர். இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நல்ல ஆரம்பத்தை வழங்கிய போதும் மத்திய தர வரிசை வீரர்களை இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் ஆட்டமிழக்க செய்தமையினால் இந்தியா அணி வெற்றி பெற்றது. பந்துவீச்சில் இந்தியா அணி சார்பாக உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்களையும், ஜஸ்பிரிட் பும்ரா சர்த்தூல் தாகூர்,   ரவீந்தர் ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

இத்தியா அணிக்கு அபார வெற்றி

Social Share

Leave a Reply