
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நிறைவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தின் போது நான்காவதாகக் களமிறங்கிய தினேஷ் சந்திமல் மூன்றாவதாகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமிந்து மென்டிஸ் ஐந்தாவதாக களமிறங்கவுள்ளதுடன், கடந்த தொடரின் போது மூன்றாவதாக துடுப்பெடுத்தாடிய குசல் மென்டிஸ், இம்முறை ஏழாவது இடத்தில் துடுப்பெடுத்தாடவுள்ளார்.
அணியின் துடுப்பாட்ட வரிசையின் ஒழுங்கு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும், புதிய வீரர்கள் எவரும் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
பிரபாத் ஜயசூரிய மற்றும் ரமேஷ் மென்டிஸ் ஆகியோர் சுழற்பந்து வீச்சாளர்களாகவும், அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டி, காலியில் நாளை(18.09) காலை ஆரம்பமாகவுள்ள இந்த டெஸ்ட் போட்டி ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது.
போட்டியின் போது 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதால், அன்றைய தினம் ஆட்டம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த போட்டியை இலவசமாகப் பார்வையிடுவதற்குப் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
போட்டியை இலவசமாகப் பார்வையிட விரும்புபவர்கள் காலி சர்வதேச மைதானத்தின் 4வது நூழைவாயிலினூடாக மைதானத்திற்குள் நுழைய முடியும் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.
இலங்கை XI: திமுத் கருணாரத்ன, பத்தும் நிசங்க, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மெத்தியூஸ், கமிந்து மென்டிஸ், தனஞ்சய டி சில்வா(அணித் தலைவர்), குசல் மென்டிஸ், ரமேஷ் மென்டிஸ், பிரபாத் ஜயசூரிய, லஹிரு குமார, அசித்த பெர்னாண்டோ