2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மிகவும் அமைதியான முறையில் இடம்பெற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் திடீரென ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லையென இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிகவும் அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்றதாக மூன்று ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் அறிவித்துள்ளதாகவும்
அமைதியான சூழல் நிலவும் நிலையில் நாடளாவிய ரீதியில் திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும் முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனுமதியின்றி இவ்வாறு திடீரென ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவது தேவையற்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் தேர்தல் முடிவுகளை சரியாக வெளியிட்டு ஜனநாயக ரீதியாக செயற்பட வேண்டும் என அரச சேவை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.