பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னரே, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்கள் மீளக் கோரப்பட்டுள்ளதாக நேற்று(24.09) சில ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியிருந்தன.
அவ்வாறு கோரப்பட்டுள்ள வாகனங்கள் காலிமுகத்திடலில் நிறுத்தப்பட்டுள்ளதாக, காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. வெளியாகிய காணொளி உண்மை என்ற போதும், குறித்த செய்தி உண்மைக்குப் புறம்பானது என உறுதியாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு அரசாங்கத்தினால் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ‘X’ தள பதிவில், காலிமுகத்திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அமைச்சரவைக்கு அல்லது ஜனாதிபதி செயலகத்திற்குச் சொந்தமானதாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தினால் வாகனங்கள் வழங்கப்படுவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வாகனங்களுக்கான வரிவிலக்கு பத்திரங்கள் மாத்திரமே அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொந்த பணத்தில் வாகனங்களை வரி விலக்குடன் பெற்றுக்கொள்ள முடியும். இருப்பினும் இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் வாகனங்கள் அவர்களுக்குச் சொந்தமானவையாகவே காணப்படும்.
நேற்றைய தினம்(24.09) கலைக்கப்பட்ட பாராளுமன்றத்திலிருந்த உறுப்பினர்களுக்கு வரி விலக்குடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.