கண்டியின் பல பகுதிகளுக்கு 65 மணி நேர நீர் விநியோகத் தடை

கண்டியின் பல பகுதிகளுக்கு 65 மணி நேர நீர் விநியோகத் தடை

பராமரிப்பு பணிகள் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்திலுள்ள நீரை எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு முதல் முழுமையாக வெளியேற்றுவதற்கு மகாவலி அதிகார சபை திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக கண்டி மற்றும் அதனை அண்மித்த பல பகுதிகளுக்கு இரண்டு நாட்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கண்டி மற்றும் பொல்கொல்ல நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் விநியோகம் தடைபடும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை அதிகாலை 01 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி மாலை 06 மணி வரை 65 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகர சபைக்குட்பட்ட ஹஸ்பத்து, புஜாபிட்டிய, பாததும்பர மற்றும் அக்குரணை நீர் விநியோக அமைப்புக்கள், குண்டசாலை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ராஜவெல்ல, சிறிமல்வத்தை, அம்பிட்டிய, அமுனுகம, ஹந்தான மற்றும் வளல ஆகிய பகுதிகளுக்கும்,கண்டி நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நீர் விநியோகம் செய்யப்படும் மாவத்தகம பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளுக்காக நாளை நள்ளிரவு முதல் நீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாகவும், ரஜரட்ட பிரதேசத்தில் விவசாயப் பணிகள் நிறைவடைந்துள்ளதாலும் நீர்த்தேக்கத்தின் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீர்த்தேக்கத்தில் தேங்கியுள்ள நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படவுள்ளது.

மேலும் மஹாவலி ஆற்றில் விளையாடுவதற்கோ மீன்பிடிப்பதற்கோ செல்வதை தவிர்க்குமாறு பிரதேசவாசிகளை மகாவலி அதிகார சபை கோரியுள்ளது.

Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version