தன்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில், சிலர் சமூகவலைத்தளங்களில் தன்னைப்பற்றி தவறாகப் பரப்புரை செய்கிறார்கள் என முன்னாள் எம்பி சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
இன்று (25.09), புதன் கிழமை காலை 8.30 மணியளவில், மன்னார் தாழ்வுபாடு வீதியில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,
“நான் மதுபான நிலைய உரிமம் வைத்திருப்பதாக என்னைச் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்புரை செய்கறார்கள். அது முற்றிலும் தவறானது. அண்மைக் காலங்களில் மதுபான விற்பனை நிலைய உரிமம் மட்டுமல்ல, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமங்களும் வழங்கப்பட்டன. அதைப் பெற்றுக்கொள்ள எமக்கு அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் விண்ணப்பித்திருக்கலாம், அல்லது அதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம். அது அவர்களுடைய தனிப்பட்ட ரீதியான வியாபாரம் அதில் நாங்கள் தலையிட முடியாது.”
“மேலும் எமது உறுப்பினர்கள் சிலர் மண் அனுமதிப் பத்திரம் வைத்து வியாபாரம் செய்தால் அது அவர்களின் சொந்த பிரச்சனை. அதில் நான் தலையிடுவதில்லை. அவர்களுக்காக நான் பிரதேச செயலாளரிடமோ அல்லது மாவட்டச் செயலாளரிடமோ பரிந்துரை செய்ததில்லை.”
“நான் பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த காலத்தில் மக்களுக்கு நன்மை மட்டுமே செய்திருக்கிறேன். மக்கள் அதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்த போது நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இருப்பினும் சிலர் என்மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னைப் பற்றித் தவறாகப் பரப்புரை செய்கின்றனர். இவ்வாறான விடயங்களை செய்வதைத் தவிர்த்து, மக்கள் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் மக்கள் ஒற்றுமையாகத் தமிழ்த் தேசியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்றார்.”
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்