ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய முக்கிய நாடுகள் 

ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு ஆதரவை உறுதிப்படுத்திய முக்கிய நாடுகள் 

ஊழலற்ற சிறந்த ஆட்சியை உருவாக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும்  வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி  (Mizukoshi Hideaki தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி  ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று(02.10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட   அநுரகுமார திசாநாயக்கவிற்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்த ஜப்பானிய தூதுவர், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஆர்வமுள்ள துறைகள் குறித்து இதன் போது விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் இரு நாடுகளும் நட்பு நாடுகளாக நெருக்கமாக பணியாற்றவும் உடன்பாடு காணப்பட்டது.

தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  ஜனாதிபதி  அநுரகுமார திசாநாயக்க கூறிப்பிட்டுள்ளவாறு ஊழலற்ற மற்றும் சிறந்த  ஆட்சியை உருவாக்குவதில் கவனம் செலுத்தியிருப்பது தொடர்பில்  ஜப்பானிய தூதுவர் பாராட்டு தெரிவித்ததுடன், அந்த வேலைத் திட்டத்திற்கு ஜப்பான் பூரண ஆதரவை வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

ஜெயிக்கா நிதியத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய  (BIA) விஸ்தரிப்பு மற்றும்   தொலைக்காட்சி ஒளிபரப்பு டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் போன்ற திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம்  அவர் தெளிவுபடுத்தினார்.

அத்துடன், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஜப்பானிய மொழியை கற்கவும் ஜப்பானில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக் கொடுப்பதாகவும்  ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிதேயாகி ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இதேவேளை, சீன மக்கள் குடியரசின் தூதுவர் கீ.ஷென்ஹொங் (Qi Zhenhong) நேற்று(02.10) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் வெற்றிக்கு மனப்பூர்வமான வாழ்த்து தெரிவித்த தூதுவர், இலங்கையின் எதிர்காலச் செயற்பாடுகளுக்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்குமெனவும், சீனா அரசாங்கத்துடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த அர்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

இலங்கைக்குள் தற்போது ஒத்துழைப்பு அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலை திட்டங்களின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதற்காக சீன அபிவிருத்தி வங்கி (CDB) மற்றும் EXIM வங்கியின் செயற்திறனான தலையீடுகள் குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் பொருளாதார நிலைத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கு ஒத்துழைக்கும் வகையில் பிரதான வர்த்தக கடன் வழங்குநர் மற்றும் இரு தரப்பு கடன் வழங்குநர் என்ற வகையில், கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீன தூதுவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார். 

இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேற்று(02.10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்த விஜயம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைந்தது.

இச்சந்திப்பில் உயர்ஸ்தானிகர் பெட்ரிக், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றமைக்காக வாழ்த்துத் தெரிவித்ததோடு, இலங்கையின் ஜனாதிபதியாக திசாநாயக்க ஆட்சியமைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கமும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்திற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், III சார்ள்ஸ் மன்னர் மற்றும் பிரித்தானிய பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) ஆகியோரின் பிரத்தியேக வாழ்த்துச் செய்திகளையும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கையளித்தார்.

நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியான ஆதரவை வழங்குமென உறுதியளித்த உயர்ஸ்தானிகர், கல்வித்துறை உறவுகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி கிட்டுமென உறுதியளித்தார். 

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸிற்கும் (Paul Stephens)  இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் (02.10) கொழும்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதி தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், இலங்கையுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்ள அர்ப்பணிப்பதாகவும் உறுதியளித்தார்.

சமுத்திர பாதுகாப்பு, எல்லை நிர்ணயம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு, அவுஸ்திரேலியா தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இதன்போது உறுதியளிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அவுஸ்திரேலியாவின் உதவி கிட்டும் என்றும், இலங்கைக்குள் நேரடி முதலீடுகளை (FDIs) ஊக்குவிக்க அவுஸ்திரேலியா விருப்பத்துடன் இருப்பதாகவும் உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

அதேபோல் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பலப்படுத்திக்கொள்ளும் தீர்மானமிக்க காரணியாக விளங்கும் பொருளாதார வெளிப்படைத் தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார். 

Social Share

Leave a Reply