மகளிர் டி20 உலக கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று(03.10) ஆரம்பமாகின்றது.
இலங்கை உட்பட 10 அணிகள் டி20 உலக கிண்ணத்திற்காகப் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
குழு Aயில் இலங்கை, இந்தியா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணியும், குழு Bயில் பங்களாதேஷ், இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவு அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் குழுவிலுள்ள ஏனைய 4 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதவுள்ளன. முதல் சுற்றின் நிறைவில் இரண்டு குழுக்களிலும் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும். இறுதிப் போட்டி எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.
மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று(03.10) பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது. இந்த போட்டியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை குழாம்: சாமரி அத்தபத்து(அணித் தலைவி), விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹஷினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, உதேஷிகா பிரபோதினி, அச்சினி குலசூரியா, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, இனோஷி பெர்னாண்டோ, சஷினி கிம்ஹானி, அமா காஞ்சனா, இனோகா ரனவீர