
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியவுடன், ஐக்கிய மக்கள் சக்தி தரப்பிலிருந்தும் சாதகமான யோசனைகள் முன்வைக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்தகைய யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருடன் இருக்கும் சிலர் அவர்களுடைய கட்சியை மாற்றி எம்முடன் இணைந்து செயற்படுவதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை எனவும் முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று(03.10) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்:
“ஐக்கிய தேசிய கட்சியை தற்பொழுது உள்ள நிலையிலேயே முன் கொண்டு சென்று, இருப்பதையும் இல்லாமல் செய்வதற்கே சிலர் எதிர்பார்க்கின்றனர். அவர்களால் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிட இயலாமை குறித்து வெட்கப்பட வேண்டும்.
அவர்களுடன் இருக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு எம்மிடம் வர வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. அதற்கு நாம் தயாரில்லை.
சஜித் பிரேமதாசவிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என நாம் கோரிக்கை விடுக்கவில்லை. அவர்களே சஜித் பிரேமதாசவிற்கு தலைமைத்துவத்தை வழங்குவதற்குத் தயாரென்று கூறினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.