இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு
இடையிலான சந்திப்பொன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08.09.2024) நடைபெற்றது.
இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாதாக உள்ளதாக இலங்கைக்கான
அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த
வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார்.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை நினைவு கூர்ந்த ஜோ பைடன், முழு அமெரிக்க மக்களின் சார்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இலங்கையின் ஜனநாயகத்தை மேலும் பலப்படுத்துவதன் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலப்பகுதியை அமைதியான முறையில் முன்னெடுத்தமைக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இந்த தேர்தல் இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களின் பலத்தையும்,ஜனநாயகத்தின் அடிப்படைகளான அமைதியான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலின் மூலம் தமது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்வதற்கான இலங்கை மக்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது எனவும் ஜோ பைடன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி, பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஜனநாயக ஆளுகை ஆகிய பல துறைகளின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்திக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் சகல பிரஜைகளுக்கும் நிலையான, வளமான மற்றும் நியாயமான நாடொன்றைப் பற்றிய
எதிர்பார்ப்பை அடைவதற்கும் அமெரிக்காவின் ஒத்துழைப்பு கிட்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது வாழ்த்துச் செய்தியில் பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின் (USAID)
ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இதன்போது தெரிவித்தார்.
ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு
அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார்.
சிறந்த அரச நிர்வாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த
தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார்.
மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜூலி சங் உறுதியளித்தார்.
தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை
வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய இராச்தியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி
பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர்.