இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவு காரணமாகக் காலமானார்.
86 வயதான ரத்தன் டாடா, உடல்நலக்குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று(09.10) அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 06ம் திகதியும் ரத்தன் டாடா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த தகவல் உண்மைக்குப் புறம்பானது என உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தற்பொழுது அவர் உயிரிழந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ரத்தன் டாடா, ‘டாடா’ குழுமத் தலைவராகச் செயற்பட்டு அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியிருந்தார். இதனூடாக இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தார்.
இவர் இந்தியப் பிரதமரின் வணிகம் மற்றும் தொழில்கள் தொடர்பான குழுவில் உறுப்பினராகவும் செயலாற்றியிருந்தார்.
இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மவிபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கவுரவ குடிமகன் அந்தஸ்து, பிரிட்டிஷ் அரசின் ஹானரரி நைட் கமாண்டர் ஆஃப் பிரிட்டிஷ் எம்பயர் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
2012ம் ஆண்டு வரை டாடா குழுமத் தலைவராகச் செயற்பட்ட ரத்தன் டாடா, உயிரிழக்கும் வரை டாடா குழும அறக்கட்டளையின் தலைவராக இருந்து வழிநடத்தி வந்தார்.