இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் ஹிஷாம் அபு தாஹா (Hisham Abu Taha) இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இச்சந்திப்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர் அபுதாஹா, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டியதற்காக பாலஸ்தீன அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பாலஸ்தீனத்திற்கு இலங்கை வழங்கும் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய தூதுவர், பலஸ்தீன் எதிர்நோக்கிய சர்வதேசப் பிரச்சினைகளில், இலங்கை பின்பற்றிய நிலையான நடவடிக்கைகளுக்குத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
எதிர்காலத்திலும் இலங்கையின் நட்புறவையும் ஒத்துழைப்பையும் தொடர்ந்தும் பேண பலஸ்தீன் எதிர்பார்ப்பதாகவும் தூதுவர் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் விசா பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடிய தூதுவர் அபுதாஹா, இரு நாடுகளுக்கும் இடையிலான மனிதவள தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்தச் சந்திப்பில், இலங்கைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் வலுவான உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினதும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டது.