2024ம் ஆண்டிற்கான மகளிர் டி20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு(11.10) நடைபெற்றது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலியா மகளிர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 19.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. பாகிஸ்தான் சார்பில் அலியா ரியாஸ் 26(32) ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள ஏனைய வீரர்கள் குறைந்தளவு ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.
அவுஸ்ரேலியா சார்பில் பந்து வீச்சில் ஆஷ்லே கார்ட்னர் 4 விக்கெட்டுக்களையும், அன்னாபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
83 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா மகளிர் அணி 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்து வெற்றியிலக்கை கடந்தது.
அவுஸ்ரேலியா சார்பில் அலிசா ஹீலி 37(23) ஓட்டங்களையும், எல்லிஸ் பெரி 22(23) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதன்படி, அவுஸ்ரேலியா மகளிர் அணி 9 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியீட்டியது. போட்டியின் ஆட்ட நாயகியாக அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் தெரிவு செய்யப்பட்டார்.
குழு Aயில் உள்ள அவுஸ்ரேலியா மகளிர் அணி பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கின்றது.