பாக்கிஸ்தான் கொலை – காப்பாற்ற முயன்றவருக்கு உயர் விருது

இரு தினங்களுக்கு முன்னர் பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட ஆடை தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த தியவதான அடித்து, எரித்து கொலை செய்யப்பட்ட வேளையில் அவரை காப்பாற்ற முயற்சி செய்த தொழிற்சாலையின் சக ஊழியருக்கு, பாக்கிஸ்தானின் இரண்டாவது உயரிய விருது வழங்கப்படவுள்ளதாக பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

“நாட்டின் சார்பாக மலிக் அத்தானுக்கு சலூட் அடிப்பதாகவும், தனது உயிரை பணயம் வைத்து, உடல் தாக்குதல்களுக்கு மத்தியிலும் முயற்சி செய்துள்ளார். அவருடைய செயல் பாராட்டப்பட வேண்டும். அதனால் அவருக்கு டம்கா ஐ சுஜாத் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளார்” என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

குறித்த கொலை சம்பவத்துடன் நேரடி தொடர்புடைய 19 பேரடங்கலாக, 124 சந்தேக நபர்களை பாக்கிஸ்தான் பொலிஸார் இதுவரை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பேரும் பொலிஸ் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ளதோடு, நாளை தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பாக்கிஸ்தான் ஊடகங்கள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில் பிரியந்த குமார கொலை செய்யப்படும் வீடியோ, புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாமென, அவரது சகோதரர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு குறித்த வீடியோ காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை முன் வைத்துள்ளார்.

பிரியந்த குமாராவின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் குறித்த காட்சிகளின் மூலம் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றமையினால் இந்த கோரிக்கையினை அவர் முன் வைத்துள்ளார்.

பாக்கிஸ்தான் கொலை - காப்பாற்ற முயன்றவருக்கு உயர் விருது

Social Share

Leave a Reply