மன்னார் பிரதான பாலத்தினருகே இராணுவ சோதனைச்சாவடி அமைந்திருந்த இடத்தில் கடற்கரைப் பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (21.10) நடைபெற்றது.
மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கிலும் மன்னார் மக்களின் பொழுதுபோக்கு மற்றும் உடல் ஆரோக்கியத்தினை கருத்திற் கொண்டும், இந்த கடற்கரை இயற்கைப் பூங்காவானது அமைக்கப்படவுள்ளது.
குழந்தைகள், பெரியவர்கள் ஓய்வு நேரங்களில் மகிழும் வகையில் இத்திட்டமானது முன்னெடுக்கப் பட்டிருப்பதோடு, சுற்றுலாப் பயணிகளும் மகிழும் வகையில் சுற்றுலாத் தகவல் மையமும் அமைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலாளர் கனகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் சிறிஸ்கந்தகுமார் (காணி), மேலதிக அரசாங்க அதிபர் பரந்தாமன், திட்டமிடற் பணிப்பாளர் ஹலீம்தீன், மன்னார் பிரதேச செயலாளர் பிரதீப், உட்பட நகரசபை அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அத்தியட்சகர்கள், கரையோரப் பாதுகாப்பு அதிகாரி மற்றும் மதத் தலைவர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது உரையாற்றிய மாவட்டச் செயலாளர் கனகேஸ்வரன்,
“மன்னார் மக்களின் நீண்டகாலத் தேவைப்பாடாக இருந்த இந்த இயற்கைப் பூங்கா அமைக்கும் திட்டமானது இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலமானது முற்றும் முழுதாக நகரசபையிடம் கையளிக்கப் பட்டுள்ள நிலையில் நகரசபையின் நிதியுடனும், சுற்றுலாத்துறையின் உதவியுடனும், நகர அபிவிருத்திச் சபையின் திட்டமிடலுடனும் இந்த இயற்கைப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இது மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் மன்னார் மக்கள் காலை, மாலை ஓய்வு நேரங்களில் மகிழ்ந்திருக்கவும் மிகவும் பயனுள்ளதாக அமையும்” என்றார்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.