இந்திய நன்கொடையின் கீழ் புதிய சத்திரசிகிச்சை அலகு திறப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்திரசிகிச்சை பிரிவை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் பாலித குணரத்ன மகிபால ஆகியோர் 2024 நவம்பர் 4 ஆம் திகதி கூட்டாக திறந்து வைத்தனர். இந்நிகழ்வில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி முரளிதரன், கிழக்கு மாகாண சுகாதார செயலாளரும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளருமான திரு.சிவலிங்கம், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலராஞ்சனி கணேசலிங்கம், சுகாதார அமைச்சு, கிழக்கு மாகாண சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாக அலகுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள், மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, மற்றும் அங்கு இடம்பெறும் அதிகளவான அறுவை சிகிச்சைகள் காரணமாக இம்மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சை பிரிவுக்கான தேவை 2015 ஆம் ஆண்டில் உணரப்பட்டிருந்தது. இதற்கான திட்டம் முன்மொழியப்பட்ட காலத்தில், சுமார் 1280 நோயாளிகள் சத்திர சிகிச்சைக்காக காத்திருப்புப் பட்டியலில் இருந்தனர். இங்கு போதிய வசதிகள் இல்லாததால், நோயாளர்கள் அதிக காலப்பகுதிக்கு காத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இங்கு புதிய சத்திர சிகிச்சைப் பிரிவு ஒன்றை நிர்மாணிப்பதற்கான உதவிகளை வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியது. இந்த திட்டப்பணிக்காக 275 மில்லியன் இலங்கை ரூபாவை நன்கொடை உதவியாக வழங்க இந்தியா தீர்மானித்த நிலையில் 2016 பெப்ரவரியில் அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன் பின்னர் இந்திய அரசு கூடுதல் நிதியை குறித்த திட்டத்துக்காக ஒதுக்கிய நிலையில் இத்திட்டத்திற்கான மொத்த இந்திய ஒதுக்கீடு SLR 302 மில்லியனா உயர்வடைந்தது.

IT சார்ந்த பணிகள், தொழில்நுட்ப வேலைகள், மின்சார வசதிகள், நீர் வழங்கல்மற்றும் கழிவு நீர் வடிகால் அமைப்புகள் போன்ற அத்தியாவசிய உட்கட்டமைப்புகளுடனான நான்கு அதிநவீன சத்திரசிகிச்சை கூடங்கள் மற்றும் பத்து ICU கட்டில்களுடன் 1464 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு மாடிக் கட்டடங்களை
அமைக்கின்றமையே இத்திட்டத்தின் பரந்த உள்ளட்டக்கமாகும்.

இந்நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 பெருந்தொற்று மற்றும் ஏனைய பொருளாதார சிக்கல்கள் காரணமாக இத்திட்டத்தில் சில சவால்கள் ஏற்பட்ட நிலையில், இத்திட்டமானது அண்மையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், இச்சத்திர சிகிச்சை அலகானது பரீட்சார்த்த செயற்பாடுகளின் பின் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக, இம்மருத்துவமனை அதிகாரிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், மின்பிறப்பாக்கி, மருத்துவ வாயு மற்றும் அருகிலுள்ள சிறுநீரக பராமரிப்பு அலகிலிருந்து மின் வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான் வழிவகைகளை அமைத்தல் போன்ற மேலதிக வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்தியா மேலதிக உதவிகளை வழங்கியது.

இந்நிலையில், நவம்பர் 4 ஆம் திகதி நடைபெற்ற திறப்பு விழாவில், உரை நிகழ்த்திய இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் மஹிபால அவர்கள், மருத்துவமனையால் முக்கியமான மருத்துவ சேவைகளை தடையின்றி வழங்குவதில் இந்த அலகானது குறிப்பிடத்தக்க தேவையை பூர்த்தி செய்யும் எனக் குறிப்பிட்டதுடன், இந்த திட்டத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சனி கணேசலிங்கம் அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது, புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சத்திரசிகிச்சைப் பிரிவினால் சத்திரசிகிச்சைக்கான காத்திருப்புப் பட்டியல் 50 வீதத்தால் குறைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதுடன், ஆண்டுதோறும் 3,000 முதல் 5,000 வரையிலான புதிய நோயாளர்கள் பயனடைவார்கள், இதனால் பிராந்தியத்தில் தரமான சுகாதாரப் பராமரிப்பு சேவைக்கான அணுகல் கணிசமான அளவில் முன்னேற்றமடைகின்றது எனச் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை இங்கு உரை நிகழ்த்தியிருந்த உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கையில், குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், முதலீட்டினை அடிப்படையாகக் கொண்டும் நன்கொடை உதவி-அடிப்படையிலும் முன்மொழியப்பட்ட பணித்திட்டங்கள், ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் தற்போது
நடைபெற்றுக்கொண்டிருக்கும் இருதரப்பு திட்டங்கள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார். முதலீட்டு திட்டங்களின் அடிப்படையில், தாங்கி தொகுதிகள் அபிவிருத்தி, சம்பூரில் சூரியசக்தி மின் உற்பத்தி ஆலை மற்றும் பல்பொருள் குழாய் இணைப்பு ஆகியவற்றை இவற்றுக்கான உதாரணங்களாக
குறிப்பிட்டிருந்தார். அத்துடன், அபிவிருத்தி உதவித்திட்டங்களின் அடிப்படையில், மொத்தம் 46,000 வீடுகளை உள்ளடக்கிய இந்திய வீட்டுத்திட்டத்தின் முதல் இரண்டு

கட்டங்களின் கீழ் கிழக்கு மாகாணத்தில் 4000 வீடுகளை நிர்மாணித்தமை மற்றும் புனரமைத்தமை, 2009-10 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு இந்திய அவசர மருத்துவ நிலையங்களில் சிகிச்சை அளித்தமை, அம்மாகாணத்தின் மீனவ சமூகத்திற்கு அந்தந்த காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள், திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில்
ரயில்-பேருந்து சேவை அமைக்கப்பட்டமை, கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் வந்தாறுமுல்லை மற்றும் ஒந்தாச்சிமடத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்வி நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் அந்நிலையங்களுக்கான உபகரண விநியோக திட்டங்கள், வாழ்வாதார நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மேம்பாட்டுக்கான ஆதரவு, கிழக்குப்
பல்கலைக்கழகத்தில் கற்கும் பொருளாதார ரீதியான ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் ஏனைய முக்கிய திட்டங்கள் தொடர்பாக அவர் இச்சந்தர்ப்பத்தில் நினைவூட்டியிருந்தார்.

மேலும் கடந்த ஆண்டில் 2.35 பில்லியன் இலங்கை ரூபாவை புதியதொரு திட்டமாக கிழக்கு மாகாணத்தின் பல் நோக்கு உதவிகளுக்காக நன்கொடையாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்திருந்ததாக உயர் ஸ்தானிகர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார். இந்த திட்டத்தின் கீழ் 33 வாழ்வாதார உதவி திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பின் உருவாக்கம் நிறைவடையும் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்ட சத்திர சிகிச்சை அலகானது இலங்கையின் சுகாதாரத்துறையில் இந்தியாவால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி ஒத்துழைப்பு திட்டங்களின் நீண்டதொரு பட்டியலில் இணைந்துகொள்கின்றது, இப்பட்டியலில் மிகவும் முக்கியமா உதாரணங்களாக நாடளாவிய ரீதியிலான 1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவை, அதேபோல ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதிகளிலும் கொவிட் 19 பெருந்தொற்று ஏற்பட்ட காலப்பகுதிகளிலும் வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள், டிக்கோயாவில் நிர்மாணிக்கப்பட்ட 150 கட்டில் வசதிகளைக் கொண்ட மருத்துவமனை, உட்கட்டமைப்பு அபிவிருத்திகள் மற்றும் மேம்பாடு, யாழ் போதனா வைத்திய சாலை, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ மனைகளுக்கான சாதனங்கள் விநியோகம் மற்றும் ஏனைய திட்டங்கள் காணப்படுகின்றன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version