இலங்கை ஆண்கள் கிரிக்கெட் அணியின் குறுகியகால ஆலோசக பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் நீல் மெக்கென்சி யை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இலங்கை அணி அங்கு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில் இத்தொடருக்கு முன்னதான முகாமில் பங்கேற்க உள்ள இலங்கை அணி வீரர்களான தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமல், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலன் ரத்நாயக்க, கசுன் ராஜித மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோருடன் இணைந்து நீல் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார்.
“தென்னாப்பிரிக்காவின் நிலைமைகள் பற்றிய முக்கியமான, ஆழமான நுண்ணறிவுகளை
சவாலுக்கு ஏற்ப இலங்கை அணி வீரர்களுக்கு மெக்கென்சி வழங்கி உதவுவார்” என்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வா இவரது நியமனம் தொடர்பில் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக அனைத்து விதமான சர்வதேச போட்டிகளிலும் 5000 ஓட்டங்களை நெருங்கிய முன்னாள் துடுப்பாட்ட வீரரான இவர் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இலங்கை அணி வீரர்களுடன் இணைந்து செயல்படுவார்.
2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழட்சியின் ஒரு பகுதியாக இடம்பெறும் இவ் டெஸ்ட் தொடரானது, 2025ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தன்னை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய தொடராக கருதப்படுகின்றது.
இவ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் டிசம்பர் 01ஆம் திகதிவரை கிங்ஸ்மேட் டர்பனிலும் , இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 05ஆம் திகதி முதல் 09ஆம் திகதி வரை சென்ட் ஜார்ஜ் பார்க் க்கெபெர்ஹாவிலும் இடம்பெறவுள்ளது.