மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்துக்காக நேற்று காலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்பிணித்தாய் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது குழந்தையும் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை காலை (18.11) வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண் அதீத வலி காரணமாக
சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை பிரசவிக்கச் செய்யுமாறு தாதியர்களிடம் பலமுறை வலியுறுத்திய போதிலும் அவர்கள் அது குறித்து கவனம் செலுத்தாமையால்
குழந்தையையைப் பிரசவிக்க முடியாது நேற்று மாலை தாய் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து மன்னார் வைத்தியசாலையை மக்கள் சூழ்ந்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவரது தாயார்,
“நான் இந்தியாவில் வசித்து வருகின்றேன். எனது மகள் திருமணம் முடித்து இங்கே வசித்து வந்தார், நீண்ட வருடங்களாக குழந்தை இல்லாது இருந்த அவருக்கு இது
முதற்குழந்தை என்பதனால் அவரைப் பராமரிப்பதற்காக,நான் இந்தியாவிலிருந்து வந்துள்ளேன், நாங்கள் கடந்த திங்கட்கிழமை காலை எங்களது மகளைப் பிரசவத்திற்காக வைத்திய சாலையில் அனுமதித்திருந்தோம்.
அவர் வலியினால் துடித்திருக்கின்றார், தன்னால் முடியவில்லையெனத் தாதியர்களிடம் கெஞ்சியுள்ளார்,நான் அவரைப் பார்க்க சென்ற போது, என்னை வெளியே இருக்குமாறு கூறினார்கள். நான் அங்கேயே இருந்தேன் மாலை நான்கு மணியளவில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பரபரப்பாக இருந்தனர்.
எனது மக்களுக்கு குழந்தை பிறந்து இறந்து விட்டதாக கூறினர். நான் மகளையாவது பார்க்க அனுமதி கேட்ட போது என்னை மட்டும் உள்ளே அழைத்தார்கள், அங்கு எனது மகளைச் சுற்றி வைத்தியர்கள் மற்றும், தாதியர்கள் நின்றார்கள்.
அவர்கள் என் மகளைக் காப்பாற்ற முயற்சிகள் செய்தார்கள் ஆனால் நான் பிரசவ அறைக்குள் சென்றபோதே என் மகள் எந்த அசைவுகளுமின்றியே இருந்தார். அவர் ஏற்கனவே இறந்து விட்டார்” என்றார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பதிலளித்த வைத்திய அத்தியட்சகர், அசாத் ஹனீபா,
“இங்கே இரண்டு மரணங்கள் நிகழ்ந்துள்ளன, மரணம் நிகழ்கின்ற போது எமது விசேட மகப்பேற்று நிபுணர், வைத்தியர்கள், மற்றும் தாதியர்கள், கடமையிலிருந்துள்ளனர். எனவே முறையான விசாரணைகளை,மேற்கொண்டு பக்கச் சார்பற்ற நீதி வழங்குவோம்” என்றார்.
எவ்வாறாயினும் இரவு 12 மணிவரை மக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாத நிலையில் வைத்தியசாலைக்கு வெளியேயும் பெருமளவிலான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், நிலமையைக் கட்டுப்படுத்த அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்