யாழ் இந்து – பம்பா இந்து மோதலில் யாழ் இந்துவுக்கு வெற்றி

பம்பலப்பிட்டி இந்து கல்லூரி மற்றும் யாழ் இந்து கல்லூரி அணிகளுக்கிடையிலான 14 ஆவது இந்துக்களின் சமரில் தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக யாழ் இந்து கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(07.02) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் இரண்டு நாட்கள் போட்டி ஆரம்பித்த போட்டியில் 64 ஓட்டங்களினால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய யாழ் இந்து கல்லூரி அணி 43.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களை பெற்றது. இதில் A.விதுஷன் 49(75) ஓட்டங்களையும், K. பரசித் 20(27) ஓட்டங்களையும் பெற்றனர்.

பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் பந்துவீச்சில் V. யுவராஜ் 4 விக்கெட்களையும், தேஸ்கர், ஸ்ரீ நிதுசன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பாடிய பம்பலப்பிட்டி இந்து கல்லூரி அணி 32.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதில் T. சந்தோஷ் 42 ஓட்டங்களை பெற்றார்.

யாழ் இந்து கல்லூரி பந்துவீச்சில் நிதீஷ் 4 விக்கெட்களையும், சுதர்ஷன் சுபர்ணன், விதுஷன் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இரண்டாம் இன்னிங்சில் துடுப்பாடிய யாழ் இந்து கல்லூரி அணி 54 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை இடை நிறுத்தியது. இதன் மூலம் பம்பலப்பிட்டி அணிக்கு வெற்றி பெற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சமநிலையில் நிறைவு செய்யும் வாய்ப்புள்ளது. யாழ் இந்து கல்லூரி சார்பாக துடுப்பாட்டத்தில் பரேஷித் 39 ஓட்டங்களையும், ஸ்ரீவத்சன் 26 ஓட்டங்களையும், விதுஷன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். இறுதி நேரத்தில் அபிவர்ணன் ஆட்டமிழக்கமால் 27 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

252 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி அணி 55.5 ஓவர்களில் சகல விக்கெட்ளையும் இழந்து 187 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் மிதுசிகன் 72 ஓட்டங்களையும், சர்விஸ் 39 ஓட்டங்களையும், யதுஷன் 25 ஓட்டங்களையும் பெற்றனர். யாழ் இந்துக் கல்லூரியின் பந்துவீச்சில் சுதர்ஷன் சுப்ரணன் 6 விக்கெட்களை கைப்பற்றினார். நிதேஷ் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

Social Share

Leave a Reply