பொருளாதார வளர்ச்சியில் வலுசக்திதுறையின் பங்களிப்பு மிகமுக்கியமானது -சத்தியலிங்கம்

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வலுசக்திதுறையின் பங்களிப்பு மிகமுக்கியமானது என தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

ஜனாதிபதி தனது உரையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அல்லது நவீனமயமாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அத்துடன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியானது இலங்கையின் மொத்த வலுசக்தி உற்பத்தியில் 70% ஐ 2030ம் ஆண்டளவில் அடைய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அதற்காக உள்ளூர் மற்று வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவுள்ளதாகவும் அதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டங்களை கொண்டுவரவிருப்பதாகவும் தெரிவித்தார்.

இச்செயற்பாடு மிக முக்கியமானது. முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை இலகுவாக மேற்கொள்வதற்கான ஒழுங்குபடுத்தல்கள் முக்கியமானது.

கடந்தகாலங்களில் முதலீடுசெய்ய வந்தவர்கள் மனக்கசப்புடன் திரும்பிச்சென்றதை நாங்கள் கண்டிருக்கிறோம். காற்றாலை மின் உற்பத்தி எமது நாட்டின் பாரிய சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது.

உற்பத்திச்செலவு மிகக்குறைவானது. சுற்றுச்சூழல் பாதிப்பானது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் இதற்கான சாத்தியப்படுகள் அதிகமுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே சில திட்டங்கள் அங்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காற்றாலை திட்டத்தை மக்கள் எதிர்க்கிறார்கள்.

சந்தேகம் கொண்டுள்ளார்கள்.
இதற்கு பல காரணங்கள் உள்ளது.
முக்கியமாக 1ம் கட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் நடைபெற்றபோது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மை பேணவில்லை.

தனிப்பட்டவர்களை திருப்திப்படுத்துவதனூடாக அவர்களுக்கு சலுகைகளை வழங்கி தமது இலக்கை அடைய முற்பட்டுள்ளார்கள். இப்போது இத்திட்டத்தை எதிர்க்கும் மக்களது பயம் நியாயமானது. இத்திட்டத்தினால் நாடு என்றவகையில் அனைவரும் பயன்பெற்றாலும் உள்ளூர் மக்கள் பெறும் பயன் என்ன? அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கலாம், அவர்களது வேறு தேவைகள் தீர்க்கப்படலாம். அதற்காக பெருநிறுவன சமூகப் பொறுப்பு ( corporate social responsibility) நிதியை பயன்படுத்தலாம்.

முதலாம் கட்ட அபிவிருத்தியின்போது மேற்கொள்ளப்பட்ட முறையற்ற அபிவிருத்தி செயற்பாடுகளினால் இன்று அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழைகாலம் நிறைவடைந்ததும் வெள்ளநீர் வழிந்தோடமுடியாதுள்ளது. இப்பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.

கூரையில் பொருத்தப்படும் சூரிய மின்பிறப்பாக்கி பொருத்தும் செயற்பாடுகளை மக்கள் விரும்புகிறார்கள். இதனூடாக உள்ளூர் மின் தேவையை பெற்றுக்கொள்ளமுடியும், நிலையான வருமானம் பெறும் செயற்பாடாகும், மின்கட்டனத்தை மீதப்படுத்தலாம்.
ஆனால் தற்போது இச்செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு காரணமாக மின்சார கட்டமைப்புகளின் கொள்ளளவு (Grip capacity) போதாமை சொல்லப்படுகிறது.
வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மற்றும் சுண்ணாகம் ஆகிய இடங்களில் இவை நிறுவப்பட்டுள்ளது.

இரண்டாவதாக மின் பிறப்பாக்கிகளின் கொள்ளளவு (Transformer capacity ) போதாததாகவுள்ளது. அவ்வாறாயின் வரவுசெலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்ட செயற்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றுவது? சூரியகல மின்சக்தியானது எமது பிரதேசத்தில் நிறைவேற்றக்கூடிய மிகசாதகமான திட்டம். பெருமளவான பயன்படுத்தப்படாத அரச நிலம் இருக்கிறது. இச்சாதகமான நிலமையை அரசு பயன்படுத்த வேண்டும். இதனால் உள்ளூர் மக்கள் தமது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தக்கூடிய பல சந்தர்ப்பங்களை பெறுவார்கள்.

இம்முறை வரவுசெலவுத்திட்டத்திலே குறைந்தவருமானம் பெறும் குடும்பங்கள், மத ஸ்தாபனங்கள் மற்றும் நீர்சுத்திகரிப்பு செயற்பாடுகளுக்கு பணம் ஒதுக்கப்படுகிறது. ஆனால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த காணப்படுகின்ற தடைகள் உடனடியாக நீக்கப்படவேண்டும்.

உற்பத்திப்பொருளாதாரம் பற்றி பேசும்போது குடிசை கைத்தொழில் செய்வோர், சிறு உற்பத்தியாளர்கள், சிறு விலங்குப்பண்ணையாளர்கள், சிறுவிவசாய உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கு மானிய அடிப்படையிலான மின்சார விநியோகம் வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் விவசாயிகள் மற்றும் மீன்பிடி தொழில் செய்வோருக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யப்படல் வேண்டும்.

தற்போது மின் இணைப்பை பெறுவதற்கு ரூபா.40,000 செலுத்தவேண்டிள்ளது, இத்தொகையை செலுத்த முடியாது பலர் இருக்கின்றார்கள். எனவே மிகக்குறைந்த வருமானம் பெறுவோர், பெண் தலைமைத்துவக்குடும்பங்கள் மற்றும் விசேட தேவைக்குட்பட்டவர்கள் ஆகியோருக்கு இலவச மின் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்” என தெரிவித்தார்.

Social Share

Leave a Reply