ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயக் கொள்கை எதிர்வரும் 29ஆம் திகதி பொலன்னறுவையில் வெளியிடப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்று (12/12) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஒரு நிலைமை ஏற்படுமாயின் அதற்கு தற்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியுடன் சரியான முறையில் விவசாய ஆலோசனைகளை வழங்க முடியாதவர்களேஉள்ளனர். சேதனப் பசளைப் பாவனைக்கு நாம் எதிரானவர்கள் அல்ல. எனினும், அதில் நடைமுறைப்படுத்தப்பட்ட முறைமை தவறானது என நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
தற்போதைய அரசாங்கம இது தொடர்பில் பிறப்பித்துள்ள வர்த்தமானி அறிவித்தலை முன்னரைப் போலவே மீளப் பெற்றுள்ளது. அத்துடன் பெரும்போக செய்கை தற்போது பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேயிலை உற்பத்தியும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜனாதிபதியுடன் இருக்கும் ஒருசில மனநலம் குன்றியவர்களின் ஆலோசனைகளே காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
