மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (24.06)செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் மன்னார் நகர சபையில் நடைபெற்றது.
இதன் போது தவிசாளர் தெரிவிற்காக தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் ஆகியோரது பெயர்கள் முன் மொழியப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் கூட்டணி கட்சியின் உறுப்பினர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் 06 வாக்குகளும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் 08 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில்,கூடிய வாக்குகளை பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் டானியல் வசந்தன் மன்னார் நகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.இவருக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கி இருந்தது.
தொடர்ந்து இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது உஷைன் மற்றும் இலங்கைத் தமிழரசு கட்சி உறுப்பினர் சோமநாதன் பிரசாத் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டது.
இந்த வாக்களிப்பின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் நூர் முகம்மது, முகம்மது உஷைன் 08 வாக்குகளையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினர் சோமநாத் பிரசாத் 05 வாக்குகளையும் பெற்ற நிலையில் கூடுதல் வாக்குகள் பெற்ற நூர் முகம்மது முகம்மது உஷைன் மன்னார் நகர சபையின் உப தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கி இருந்தது.
குறித்த தெரிவுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.
ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்