மன்னார் நகரப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்(24.06) மன்னாரில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியாளர்கள் தேர்வின் பின்னரே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
விஷமிகளால் நடாத்தப்பட்டுள்ள இந்த சிலை உடைப்பு சம்பவம் பின்னனியிலிருந்து ஏவப்பட்டே நடைபெற்றுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.
செவ்வாய் கிழமை இரவு நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி சில உள்ளுராட்சி மன்ற சபைகளில், மக்களின் வாக்குகளால் முன்னிலையில் இருந்தது.
இருந்தபோதிலும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் முரண்பாடு மற்றும் பொறுப்பற்ற தன்மையாலும் அக்கட்சியினால் மன்னாரில் ஐந்து உள்ளுராட்சி சபைகளில் ஒரு சபையையும் தனதாக்கிக் கொள்ள முடியவில்லை.
நேற்றைய தினம் (24.05) மன்னாரில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் தவிசாளர் உப தவிசாளர் தெரிவில் தமிழரசுக் கட்சி ஒன்று அல்லது இரண்டையாவது கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்தபோதும் தேசிய மக்கள் சக்தி , ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இணைந்து சபைகளைக் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில், தேசியம் பேசி வந்த தமிழ்க் கட்சிகள் அரசியல் மேடைகளில் பிரச்சாரக் கூட்டங்களில் பேசி வந்ததைப் போலவே மன்னாரில் உள்ளுராட்சி மன்றத் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவில் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளை பெரும் ஏமாற்றத்திற்குட்படுத்தப் பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே மன்னார் நகரில் நீண்டகாலமாக கம்பீரமாக காட்சியளித்து வந்த தந்தை செல்வாவின் சிலையின் தலை துண்டிக்கப்பட்டுள்ள சம்பவமானது மன்னார் மக்களை விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.
