இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கண்டி, பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது 20-20 போட்டியில் இலங்கை அணி இலகு வெற்றி ஒன்றை பெற்றுள்ளது. குஷல் மென்டிஸ், பத்தும் நிஸ்ஸங்க ஆகியோர் அதிரடி நிகழ்த்தி இந்த வெற்றியினை பெற்றுக்கொடுத்தனர். நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 20 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 05 விக்கெட்களை இழந்தது 154 ஓட்டங்களை பெற்றது.
155 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் பத்தும் நிஸ்ஸங்க, குஷல் மென்டிஸ் ஜோடி 78 ஒட்டகளை 4.4 ஓவர்களில் பகிர்ந்தனர். 16 பந்துகளில் நிஸ்ஸங்க 42 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வேகத்தை குறைத்த மென்டிஸ் 51 பந்துகளில் 73 ஓட்டங்களை பெற்றார். குஷால் பெரேரா 24(25) ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இலங்கை அணி 19 ஓவர்களில் 03 விக்கெட்ளை இழந்து 159 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. 46 ஓட்டங்களை ஆரம்ப இணைப்பாட்டமாக பெற்றனர். ஐந்தாவது ஓவரின் இறுதிப் பந்தில் நுவான் துஷார முதல் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் வேகமாக விக்கெட்கள் விழ ஆரம்பித்தன. ஓட்டங்களும் கட்டுப்படுத்தப்பட்டன. 14.4 ஓவர்களிலேயே 100 ஓட்டங்களை பங்களாதேஷ் அணி கடந்தது. மெஹ்தி ஹசன் மிராஸ் மற்றும் மொகமட் நைம் ஆகியோர் இணைந்து 46 ஓட்ட இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இதன் மூலம் தடுமாறிய பங்களாதேஷ் அணி ஓரளவு மீண்டு வந்தது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பர்வேஸ் ஹொசைன் எமோன் 38 ஓட்டங்களை பெற்றார். மெஹ்தி ஹசன் மிராஸ் 29 ஓட்டங்களையும் மொகமட் நைம் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மீண்டும் அணிக்குள் அழைக்கப்பட்ட தஸூன் சாணக்க சிறப்பாக பந்துவீசினார். 4 ஓவர்களில் 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட். 3 வருடங்களின் பின்னர் மீண்டும் விளையாடிய ஜெப்ரி வன்டர்சாய் 4 ஓவர்களில் 26 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை கைப்பற்றினார். நுவான் துஷாரா 01 விக்கெட்டை கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷணவுக்கு 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் கிடைத்தன.
இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடும் முதலாவது 20-20 போட்டி இதுவாகும். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டி 13 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.